மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் பள்ளியில் படித்துவந்த 16 வயது மாணவி ஒருவர், 20 வயதுடைய இரண்டு நபர்களுடன் நட்பாகப் பழகிவந்துள்ளார். அந்த இருவரும் மாணவியிடம் நல்லமுறையில் பழகி நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியே எங்கேனும் செல்லலாம் என அந்த மாணவியைத் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த மாணவியை அங்கிருந்து ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அதை தங்கள் நண்பர்களுக்கும் மொபைலில் லைவ் செய்திருக்கின்றனர்.

மேலும், அந்த மாணவியைப் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு, அதைவைத்து அவரை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களில் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது நிச்சயமான இளைஞரின் நண்பன், நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். அதைக் கண்ட அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திவிட்டு இது குறித்துக் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் இளைஞர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் தெரிந்து அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் இருவரையும் கைதுசெய்யத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
