Published:Updated:

`ரன்பீர்தான் தேட வேண்டும்!' - பொதுத்தேர்விலிருந்து தப்ப 12-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

Representational Image
Representational Image

இந்தக் கடத்தல் சம்பவத்தில் மூன்று வயதுச் சிறுவன் எந்தவித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளான்.

தேர்வு எழுதுவதிலிருந்து தப்பிக்க மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், குழந்தையைக் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஆர்ப்பாட்டத்துக்காக மாணவர்கள் கடத்தல்?' - நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகியைச் சுற்றும் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொரினா மாவட்டத்தில் உள்ள துடிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் ரன்பீர். அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறான். அம்மாநிலத்தில் நேற்று (2.3.2020) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், அந்தத் தேர்வை எழுத விரும்பாத ரன்பீர், உறவினர் ஒருவருடைய 3 வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளான். சிறிதுதூரம் கடத்திச் சென்றவன், ஓரிடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்தக் குழந்தையை அப்படியே போட்டு விட்டுச் சென்றுள்ளான்.

இதற்கிடையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தாய் விடியற்காலை 3 மணிக்கு எழுந்து பார்த்துள்ளார். அப்போது அருகிலிருந்த, குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், வீட்டையொட்டிய இடங்களில் தேடினார். குழந்தை அங்கு இல்லாததால் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து குழந்தை காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஜவுரா காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Representational Image
Representational Image

தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். அப்போது குழந்தையைக் கடத்திய நபர் எழுதியாகக் கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், குறிப்பிட்ட பகுதியில் குழந்தையை ரன்பீர்தான் தேட வேண்டும். தேர்வுக்கு அவன் செல்லக் கூடாது என்று எழுதப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

அதிலிருந்து கிடைத்த தகவலையடுத்து குழந்தை இருக்கும் பகுதிக்கு போலீஸார் விரைந்துள்ளனர். பின்னர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குழந்தையை மீட்டுள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் மூன்று வயதுச் சிறுவன் எந்தவித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளான். கடிதத்தில் இருந்த கையெழுத்தால் சந்தேகமடைந்த போலீஸார், ரன்பீரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் குழந்தையைக் கடத்திய குற்றத்தை ரன்பீர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையைக் கடத்திய ரன்பீரை போலீஸார் கைதுசெய்தனர். பொதுத் தேர்வை எழுதுவதிலிருந்து தப்பிக்கவும் பெற்றோர்களைத் திசை திருப்பவும் இப்படியான செயல்களைச் செய்துள்ளதாக ரன்பீர் ஒப்புக்கொண்டுள்ளான்.

அடுத்த கட்டுரைக்கு