`சமையலறையில் வீசிய துர்நாற்றம்; அடுப்புக்கு கீழே கணவன் சடலம்'- போலீஸை பதறவைத்த பெண்!
மத்தியப்பிரதேசத்தில் கணவனைக் கொலை செய்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பனாவல் வழக்கறிஞராக இருந்தார். அக்டோபர் மாதம் 22-ம் தேதியிலிருந்து மகேஷைக் காணவில்லை என அவரின் மனைவி பிரமிளா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நவம்பர் 21-ம் தேதி மகேஷின் மூத்த சகோதரர் காவல் அதிகாரிகளை நேரில் சந்தித்து சகோதரர் மாயமான விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

``என் சகோதரர் காணாமல் போனது தொடர்பாக அவர் மனைவியிடம் விசாரிக்கச் சென்றோம். ஆனால், அவர் எங்களை கடுமையான சொற்களால் வசைபாடினார். கணவன் காணாமல் போன விரக்தியில் அவர் இப்படிப் பேசுகிறார் என நினைத்தோம். கடந்த ஒரு மாதமாக நாங்கள் இதுகுறித்து பேசும்போது கடுமையாக நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் என் சகோதரன் மாயமானதற்கு எங்கள் குடும்பத்தினர்தான் காரணம் என பழி சொல்கிறார். அவரின் பேச்சில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவரது நடத்தை சந்தேகிக்கும்படியாக இல்லை. ஆனால், விசாரணை சமயத்தில் அந்தப் பெண் வீடு அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியது. வீட்டின் உள்ளே இருந்து வந்த வாடையையடுத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தனர். எல்லா இடங்களும் சுத்தமாக இருந்தது. சமையலறையும் தூய்மையாக இருந்தது. ஆனால், அங்கிருந்துதான் அந்த வாடை வீசியது.
சமையலறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்லாப்புக்கு கீழே இருந்து வாசம் வந்ததை போலீஸார் கண்டறிந்தனர். அந்த ஸ்லாப்புக்கு மேல் அவர் சமைத்து வைத்திருந்தார். அதைப் அப்புறப்படுத்திப் பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் இருந்தது. அது காணாமல் போனதாக கூறப்பட்ட மகேஷின் சடலம் என்பது தெரியவந்தது. கணவரைக் கொலை செய்ததை பிரமிளா ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``மகேஷுக்கும் அவரது மைத்துனர் மனைவிக்குமிடையே தவறான தொடர்பு இருந்ததாக பிரமிளா கூறியுள்ளார். இதன்காரணமாக தன் மைத்துனருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு அதன்பின் கணவர் காணமல் போனதாக நாடகமாடியுள்ளார். அவரது மைத்துனர் கங்காராமிடம் விசாரித்ததில் தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். ஒரு பெண் தனியாக கொலை செய்து உடலை சமையலறையில் வைத்து மறைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு கண்டிப்பாக யாராவது உதவி செய்திருக்க வேண்டும். அந்த நபர் யார் என்ற விசாரணையில் இறங்கியுள்ளோம்” என்றனர்.