Published:Updated:

` 200 ஆண்டு கோமுட்டிக் குளம் எங்கே போனது?!' -வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடுகடுத்த நீதிபதிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் குளம் காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HighCourt
Chennai HighCourt

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் வங்கியில் பெற்ற கடன் தொகைக்குக் கிணறு வெட்டியதாகச் சான்றிதழ் பெற்று, அந்தக் கிணற்றைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்வது போன்ற நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

Court
Court

நகைச்சுவையாக இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அரசுத் துறைகளில் புரையோடிப்போன ஊழலைக் கடுமையாக சாடியிருக்கும் அந்தக் காட்சி. தமிழகக் காவல் நிலையங்களில் அடுத்தடுத்து பதிவான ஏரி, குளங்களைக் காணோம் என்ற உண்மையான புகார்கள் அந்தக் காட்சியை நினைவுபடுத்தின.

அப்படித்தான் தற்போது 200 வருடங்களாக இருந்த குளத்தைக் காணவில்லை என்று ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த வெள்ளிமேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞரான இவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், ``விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் இருக்கும் வெள்ளிமேடு பேட்டை எனது சொந்தக் கிராமம். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு கோமுட்டிக் குளம் என்றொரு குளம் இருந்தது. கட்டடங்களின் கழிவுகளைப் போட்டு குளத்தைக் காணாமல் செய்துவிட்டார் எங்கள் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை. அவரின் இந்தச் செயலுக்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் தாசில்தார் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். கோமுட்டிக் குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாகக் கிராமப் பதிவேட்டில் திருத்தம் செய்திருக்கிறார் தாசில்தார்.

Vikatan

இதனால் சுமார் 200 வருடங்களாக இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்துவந்த குளம் காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் குளத்தை பழைய நிலைக்குக் கொண்டுவருவதோடு, குளம் காணாமல் போகக் காரணமாக இருந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்தேன். ஆனால், இதுவரை அது பரிசீலிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்தக் குளம் தொடர்பான வருவாய்த்துறையின் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் இருவரும் தனித்தனியே பதில் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில்`அ’ பதிவேட்டில் சம்பந்தப்பட்ட அந்த சர்வே எண்ணில் மாரியம்மன் கோவிலும் ஆரம்ப சுகாதார நிலையமும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, குளம் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை.

``கோமுட்டி குளம் என்று ஒன்று இருந்ததா இல்லையா என்பதற்கான ஆவணங்களுடன் அனைத்து அதிகாரிகளும் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.”
உயர் நீதிமன்றம்

அதேசமயம் கிராம வரைபடம் (Village Map) மற்றும் புல அளவீட்டு புத்தகத்தில் (Field Measurement Book) குளம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி இருவேறு மாறுபட்ட தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், `அ’ பதிவேட்டில் குளம் இல்லை என்றும், கிராம வரைப்படத்தில் குளம் இருப்பது போலவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தங்களை செய்தது யார்? எந்த ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டது? கோமுட்டி குளம் என்று ஒன்று இருந்ததா இல்லையா என்பதற்கான ஆவணங்களுடன் அனைத்து அதிகாரிகளும் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.