Published:Updated:

மூவர் கொலை வழக்கு: ஏ.சி விபத்தென நாடகமாடிய கணவன்-மனைவி? மரண தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

உயிரிழந்த மூவர், தீர்ப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சொத்துக்காக கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில், கணவன் - மனைவி இருவருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை, ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மூவர் கொலை வழக்கு: ஏ.சி விபத்தென நாடகமாடிய கணவன்-மனைவி? மரண தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சொத்துக்காக கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில், கணவன் - மனைவி இருவருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை, ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Published:Updated:
உயிரிழந்த மூவர், தீர்ப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜீ - கலைச்செல்வி தம்பதி. இவர்களுக்கு கோவர்த்தனன், கௌதமன் என இரண்டு மகன்கள். மூத்த மகன் கோவர்த்தனனுக்கு திருமணம் செய்துவைத்த இந்த தம்பதி, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி தங்களுடைய இளைய மகனான கௌதமனுக்கும் திருமணம் முடிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். திருமணத்துக்கு குறுகிய நாள்களே இருந்த நிலையில், திருமண வேலை முடித்துக் கொண்டு 2019-ம் ஆண்டு, மே 14-ம் தேதி இரவு ராஜீ, கலைச்செல்வி, கௌதமன் ஆகியோர் தங்களது வீட்டில் ஒரே அறையில் உறங்கியிருக்கின்றனர். மறுதினம் அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர்கள் உறங்கிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவர்த்தனன் - தீபா காயத்ரி
கோவர்த்தனன் - தீபா காயத்ரி

போலீஸார் விசாரணையில், ஏ.சி வெடித்து மூவரும் உயிரிழந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார் ராஜீயின் மூத்த மகன் கோவர்தனன். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர் திண்டிவனம் காவல்துறையினர். விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் அறையில் இருந்த ரத்தக் கறைகள்,  கோவர்த்தனனின் அறையில் காணப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கு இடமான பாட்டில் போன்றவை போலீஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், அம்புலன்ஸுக்கும் , போலீஸாருக்கும் கோவர்தன் முரணான பதில்களை தெரிவித்திருந்ததும், உயிரிழந்த கலைச்செல்வியின் சகோதரர் மூவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும்  சந்தேகத்தை அதிகரித்தது. 

எனவே, `இந்த சம்பவம்  தீ விபத்தா அல்லது சொத்துக்காக மூவரும் கொலை கொலைசெய்யப்பட்டார்களா?' என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களும் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கோவர்த்தனன், அவர் மனைவி தீபா காயத்ரி ஆகியோரிடம் போலீஸார் தனித் தனியாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சொத்துக்காக மூவரையும் கொலை  செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கானது வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

போலீஸார் தரப்பில், இந்த சம்பவம் விபத்தல்ல, கொலை தான் என நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவர்த்தனன், அவர் மனைவி தீபா காயத்ரி இருவருக்கும் தலா 4 தூக்கு, 2 ஆயுள் தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி காட்டியிருந்தது. இந்நிலையில்,  கடந்த சனிக்கிழமை,  கணவன் - மனைவி இருவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.