Published:Updated:

மதுரை: ஊராட்சித் தலைவர் கொலை வழக்கு! - வீடு தீவைப்பு சம்பவத்தால் மீண்டும் பதற்றம்

கிருஷ்ணராஜன்
கிருஷ்ணராஜன்

கருப்பாயூரணி அருகேயுள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியின்றி வெற்றிபெற்றவர் 48 வயதான கிருஷ்ணராஜன். இவரும், ஊராட்சியில் தண்ணீர் திறந்துவிடும் ஊழியரான முனியசாமியும் கடந்த 11-ம் தேதி இரவு குன்னத்தூர் மலையடிவாரம் அருகே பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

மதுரை அருகே குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், ஊராட்சி செயலாளர் உட்பட 10 பேரிடம் நடைபெறும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

கிருஷ்ணராஜன்
கிருஷ்ணராஜன்

கடந்த சில நாள்களில், மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர், பாண்டி கோயில் பூசாரி என ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் குன்னத்தூரில் நடந்த இரட்டைக்கொலையில் விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கருப்பாயூரணி அருகேயுள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றவர் 48 வயதான கிருஷ்ணராஜன். இவரும், ஊராட்சியில் தண்ணீர் திறந்துவிடும் ஊழியரான முனியசாமியும் கடந்த 11-ம் தேதி இரவு குன்னத்தூர் மலையடிவாரம் அருகே பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

தாக்கப்பட்ட பால்பாண்டி வீடு
தாக்கப்பட்ட பால்பாண்டி வீடு

அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல், இருவரையும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அறிந்து அந்தப் பகுதி மக்கள் கோபமடைந்து கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் கருப்பாயூரணி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ``ஊராட்சித் தலைவராக கிருஷ்ணராஜன் பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி நிர்வாகத்தில் நடந்திருக்கும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார். இது சம்பந்தமாக ஊராட்சிச் செயலாளர் பால்பாண்டியிடம் கேட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். அந்தப் பகைதான் கொலைக்குக் காரணமா அல்லது ஊராட்சித் தலைவராக விரும்பியவர்களிடம் ஏற்பட்ட பகையா அல்லது வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றார்கள்.

வீட்டுக்குத் தீவைப்பு
வீட்டுக்குத் தீவைப்பு

இந்தநிலையில் இந்தக் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஊராட்சிச் செயலாளர் வீரணன் என்ற பால்பாண்டி மற்றும் திருப்பதி ஆகியோரை காவல்துறை விசாரிக்கும் தகவல், கொலையான ஊராட்சித் தலைவர் கிருஷ்ணராஜன் தரப்பினருக்கு தெரிந்து, சற்று முன் அவர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தி தீவைத்து கொளுத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு