நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சிரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் மானுவேல் ஜார்ஜ் என்பவருக்கு அந்த நிலத்தில் எம்-சாண்ட் தயாரிக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
செயற்கை மணலான எம்-சாண்ட் தயாரிக்க அனுமதி பெற்ற நிலையில்,அதற்குப் பதிலாக நிலத்துக்கு அருகில் உள்ள வண்டல் ஓடை மற்றும் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை அப்போது காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணன் பிடித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகே அங்கு ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டதால், நீதிமன்றம் தலையிட்டு மணல் கடத்தல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் பிரதிக்தயாள் ஆய்வு மேற்கொண்டார். அதில், 27,774 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 9.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் மணல் கடத்தலுக்குத் துணையாகச் செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் என நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அப்போதைய கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபீதாவின் உறவினரான சமீர் என்பவர் கைது செய்யப்பட்டதால் சபீதா இடமாற்றம் செய்யப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கேரள பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் ஐந்து பாதிரியார்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

விசாரணையின் முடிவில், பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (69) பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜிஜோ ஜேம்ஸ் (37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலவியால் (53) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் பாதிரியார் ஜோஸ் சமகலா ஆகிய இருவரும் சிறுநீரக கோளாறு காரணமாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிரியார் ஜோஸ் சமகாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் கலவியால் ஆகிய நால்வரும் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைதான கேரள பிஷப் மற்றும் பாதிரியார்களுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பொறுப்பு மாஜிஸ்திரேட் விசாரணை செய்து தள்ளுபடி செய்தார்.