Published:Updated:

`கூலியைத் தரலன்னா..!'- கரூரில் 250 அடி உயர டவரில் ஏறிய கட்டடத் தொழிலாளி

தற்கொலைக்கு முயன்ற முத்து
தற்கொலைக்கு முயன்ற முத்து

'எனக்கு தேவைப்படும்போது மொத்தச் சம்பளத் தொகையையும் வாங்கிக்கொள்கிறேன்' என்று கட்டடக் கான்ட்ராக்டரிடம் முத்து தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

`எனக்கு வர வேண்டிய கூலித்தொகை முழுவதையும் பெற்றுத் தரலைன்னா, இந்த 250 அடி உயர செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலை பண்ணிக்குவேன்' என்று போலீஸாரையும் பொதுமக்களையும் மிரட்டிய கட்டடத் தொழிலாளியால், தென்னிலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற முத்து
தற்கொலைக்கு முயன்ற முத்து

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்து (வயது 50). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு, கரூர் மாவட்டம், தென்னிலைப் பகுதியில் தங்கி கட்டட வேலையைப் பார்த்து வந்தார்.

`வேப்பமரம்; தாயின் சேலை!' -குடும்பச் சண்டையால் தற்கொலை முடிவை நாடிய கரூர் பட்டதாரி

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், வேலை இல்லாமல் தவித்து வந்தார். தனது குடும்பத்துக்கு சாப்பாடு வழங்க முடியாமல் அல்லல்பட்டு வந்தார்.

தற்கொலைக்கு முயன்ற முத்து
தற்கொலைக்கு முயன்ற முத்து

இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால், மறுபடியும் தென்னிலைப் பகுதியைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் ஒருவர் மூலமாக, கட்டட வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து வேலை பார்த்தாலும், கட்டடக் கான்ட்ராக்டரிடம் முழுச் சம்பளத்தையும் வாங்கிக்கொள்ளாமல், சாப்பாட்டுக்குத் தேவைப்படும் பணத்தை மட்டும் வாங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. 'எனக்கு தேவைப்படும்போது மொத்தச் சம்பளத் தொகையையும் வாங்கிக்கொள்கிறேன்' என்று கட்டட கான்ட்ராக்டரிடம் முத்து தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில், நேற்று மதியம் முத்து, அந்தக் கட்டட கான்ட்ராக்டரிடம் போய், தனக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தொகை முழுவதையும் உடனடியாகத் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கான்ட்ராக்டர் மறுப்பு தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். இதனால் கோபமான முத்து, தென்னிலை காவல் நிலையத்துக்குப் பின்புறம் உள்ள 250 அடி உயரமுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு ஏறி, தற்கொலை முயற்சியில் இறங்கினார். இதைப் பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், தென்னிலைக் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அரவக்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் தகவல் கொடுத்து, அவர்களையும் வரவழைத்தனர். டவரில் ஏறிய தீயணைப்பு வீரர்கள், முத்துவைக் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால் முத்துவோ, 'கட்டடக் கான்ட்ராக்டரிடமிருந்து எனக்கு வரவேண்டிய முழுச் சம்பளத் தொகையையும் பெற்றுத் தாங்க. அப்போதுதான், கீழே இறங்குவேன்' என்று பயமுறுத்தினார். 'நீங்க கீழே இறங்குங்க. உடனே, உங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தொகையைப் பெற்றுத் தருகிறோம்' என்று சொல்லிப் பார்த்தனர்.

கொரோனா: `COVID-19 பெயரில் சைபர் தாக்குதல்!’- மத்திய அரசின் அலர்ட்

ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு முத்து செவிசாய்க்கவில்லை. இதனால், தென்னிலைக் காவல்துறையினர், கட்டடக் கான்ட்ராக்டரிடம் போய், முத்துவுக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தொகையைப் பெற்று வந்தனர். அதனை தீயணைப்புத் துறை வீரர்கள், செல்போன் டவரின் உச்சிக்குச் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த முத்துவிடம் வழங்கினர்.

அதன்பிறகே, முத்து தற்கொலை முயற்சியைக் கைவிட்டு, கீழே இறங்கினார். அவர் பத்திரமாகக் கீழே இறங்கிய பின்னரே, போலீஸாரும் பொதுமக்களும் பெருமூச்சுவிட்டனர். இதுசம்பந்தமாக, தற்கொலைக்கு முயன்றதாக முத்து மீது, தென்னிலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது சம்பளத் தொகையைப் பெற்றுத் தர வலியுறுத்தி கட்டடத் தொழிலாளி ஒருவர், செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு