Published:Updated:

மதுரை: ’மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் கொன்றோம்’ - மீண்டும் உருவெடுக்கும் சிசுக் கொலை?

சிசுக் கொலை
சிசுக் கொலை ( Representative Image )

உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்திருப்பது, மீண்டும் பெண் சிசுக் கொலை தலையெடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியில் பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மதுரை ராஜாஜி மருத்துவமனை
மதுரை ராஜாஜி மருத்துவமனை

உசிலம்பட்டி வட்டாரத்தில் பல வருடங்களுக்கு முன்பு பெண் சிசுக்களை கொலை செய்யும் கொடிய வழக்கம் நிலவி வந்தது. தமிழக அரசின் நடவடிக்கையால், குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில், கடுமையான நடவடிக்கைகளால் இந்த வழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. வளர்க்க முடியாத குழந்தைகளை அரசிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக இந்த கொடிய வழக்கத்தை மக்கள் மறந்த நிலையில், நீண்ட காலத்துக்கு பிறகு கடந்த வருடம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக சிசுக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தொடங்கியது.

மதுரை: ’மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் கொன்றோம்’ - மீண்டும் உருவெடுக்கும் சிசுக் கொலை?
Representational Image

இந்நிலையில் மீண்டும் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரமான பெண் குழந்தை கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கே.பாறைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னச்சாமி - சிவபிரியங்கா தம்பதிக்கு, ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிவபிரியங்காவுக்கு மூன்றாவதாக மீண்டுமோர் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 17-ம் தேதி இரவு குழந்தைக்கு உடல் நலம் சரியில்ல என்று கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு, கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை சோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். குழந்தை முகத்தில் நகக்கீரல்கள் உள்ளதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், உத்தப்பநாயக்கனூர் காவல்துறைக்கு புகார் அனுப்பினர்.

உடனே விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, உடற்கூராய்விற்காக குழந்தையின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிந்த நிலையில், மூச்சுத்திணறல் எப்படி ஏற்பட்டது என்பதை குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தை சிசுக் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மூன்றாவதும் பெண் குழந்தையாகவே பிறந்ததால், தலையணை வைத்து அமுக்கி, மூச்சு திணற வைத்து கொன்றதாக, குழந்தையின் பாட்டி நாகம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து நாகம்மாள் கைது செய்யப்பட்டார். குழந்தையின் பெற்றோரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கும் சிசுக்கொலை கவலையளிக்கச் செய்கிறது.

அடுத்த கட்டுரைக்கு