Published:Updated:

பொய்ப் பாலியல் புகார்; மாணவிகளைத் தூண்டிய தலைமையாசிரியர் - போக்சோவில் நடவடிக்கை எடுக்கும் போலீஸ்

போலீஸ்

ஆசிரியர்கள்மீது பொய்யாகப் புகாரளித்து போக்சோ வழக்கு பதிவுசெய்ய மாணவிகளைத் தூண்டிய தலைமையாசிரியர்மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்திருக்கிறார்.

பொய்ப் பாலியல் புகார்; மாணவிகளைத் தூண்டிய தலைமையாசிரியர் - போக்சோவில் நடவடிக்கை எடுக்கும் போலீஸ்

ஆசிரியர்கள்மீது பொய்யாகப் புகாரளித்து போக்சோ வழக்கு பதிவுசெய்ய மாணவிகளைத் தூண்டிய தலைமையாசிரியர்மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
போலீஸ்

மதுரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள்மீது பொய்யாகப் புகாரளித்து போக்சோ வழக்கு பதிவுசெய்ய மாணவிகளைத் தூண்டிய தலைமையாசிரியர்மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்திருக்கிறார்.

போக்சோ
போக்சோ

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மதுரை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவையும், ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்தையும் தொடர்புகொண்ட அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், ``பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் சில மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக மாணவிகள் சிலர் புகார்ப் பெட்டியில் கடிதம் போட்டிருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" எனத் தகவல் அளித்தார்.

உடனே புகார் பெறப்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணைசெய்து முதற்கட்டமாக இரண்டு பெண் ஆசிரியைகள் உட்பட மூன்று ஆசிரியர்கள் மீது கருப்பாயூரணி காவல் நிலையத்தில் அன்றைய தினமே போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ஆசிரியர்
ஆசிரியர்

இந்த நிலையில், வழக்கு பதிவுசெய்யப்பட்ட பெண் ஆசிரியைகளில் ஒருவர் தென்மண்டல ஐ.ஜி-க்கு அனுப்பிய புகார் மனுவில், ``ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதத்தில் பொய்ப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை முறையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்

இதையடுத்து தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவின்படி மதுரை சரக டி.ஐ.ஜி., எஸ்.பி மேற்பார்வையில் ஊமச்சிக்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் புகார்க் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் சிறுமிகள், `அந்தக் கடிதத்தை நாங்களாக எழுதவில்லை, தலைமை ஆசிரியர் கூறியதால்தான் அவ்வாறு எழுதினோம். எந்த ஆசிரியரும் தவறாக நடக்கவில்லை" என்று கூறியிருக்கின்றனர்.

எஸ்.பி சிவபிரசாத் - ஐ.ஜி அஸ்ரா கார்க்
எஸ்.பி சிவபிரசாத் - ஐ.ஜி அஸ்ரா கார்க்

குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம், சாட்சிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் புகாரில் கூறப்பட்டது அனைத்தும் பொய் எனத் தெரியவந்தது.

தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பிரச்னை இருந்ததால், அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் தலைமையாசிரியர், பள்ளி மாணவிகளைத் தூண்டிவிட்டு பொய்ப் புகார் அளித்தது உறுதியானது.

இந்த விசாரணை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இறுதி அறிக்கையாக மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆசிரியர்களுக்கு எதிராகப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டதாக தீர்ப்பளித்து வழக்கு முடிக்கப்பட்டது.

தீர்ப்பு
தீர்ப்பு

இது குறித்து எஸ்.பி சிவபிரசாத், ``வழக்கு பதிவுசெய்யப்பட்ட ஐந்து நாள்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தில் சாட்சிகளை காலதாமதமின்றி ஆஜர்படுத்தி 80 நாள்களுக்குள் காவல்துறையினரின் விசாரணை அறிக்கை சரியெனத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இது போன்று ஆசிரியர்களுடனான தனிப்பட்ட பகையில் பொய்ப் புகார் அளிக்க சிறுமிகளைத் துாண்டிவிட்ட தலைமை ஆசிரியர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தை யாராவது தவறாகப் பயன்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், "தவறிழைக்காதவர்கள் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவந்த மதுரை சரக டி.ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்திலேய முதன்முறையாக போக்சோ வழக்கில் பொய்யான புகார் அளிக்கக் காரணமானவர் மீது அதே சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.