Published:Updated:

“கஷ்டப்படுற உள்ளூர் பெண்களை குறிவெச்சோம்!”

பாலியல் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழில்

மதுரையை அதிரவைக்கும் எம்.எல்.எம் பாணி பாலியல் தொழில்

“கஷ்டப்படுற உள்ளூர் பெண்களை குறிவெச்சோம்!”

மதுரையை அதிரவைக்கும் எம்.எல்.எம் பாணி பாலியல் தொழில்

Published:Updated:
பாலியல் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழில்

‘‘உனக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரைக் கூட்டிட்டு வந்தா, நீ தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவங்க தொழில் செஞ்சு கிடைக்கும் வருமானத்துலருந்து உனக்கு கமிஷன் வரும். அந்த ரெண்டு பேரும் ஆளுக்கு ரெண்டு பேரைக் கூட்டிட்டு வந்தா, அதுல இருந்தும் கமிஷன் வரும். இப்படி ஆளுங்களைச் சேர்க்கச் சேர்க்கப் பணம் கொட்டும்’’ - ஏதோ எம்.எல்.எம் பிசினஸ்போல் இருக்கிறதுதானே. ஆம்... ஆனால், பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித்தொடர் வணிகம் அல்ல... ஏழைப் பெண்களை மூளைச்சலவை செய்து, பாலியல் தொழிலில் அவர்களைத் தள்ளும் இந்த எம்.எல்.எம் பாணி நூதனக் கொடுமை மதுரையில் அரங்கேறியிருக்கிறது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட தரகர்கள் இருவரை, சமீபத்தில் போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

தமிழகத்தின் பிரதான நகரங்களைப்போலவே மதுரையிலும் பாலியல் தொழில் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் தரகர்கள் கைதுசெய்யப்படுவது ஒரு தொடர் நிகழ்வுதான். எவ்வளவு நடவடிக்கை எடுத்தும், பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் கும்பல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், சிறையிலிருந்து வெளியே வந்ததும் தொழிலை இன்னும் ஹைடெக்காக நடத்துகிறார்கள்.

பாண்டியராஜா, குணசேகரன்
பாண்டியராஜா, குணசேகரன்

இதில், தமிழகப் பெண்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில, வெளிமாவட்டப் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்துவந்து, மதுரையிலுள்ள காஸ்ட்லியான அபார்ட்மென்ட், பங்களா டைப் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், முக்கிய ஹோட்டல்களில் நிரந்தர அறையெடுத்தும் தங்கவைத்து தொழில் செய்துவருகிறார்கள். அது மட்டுமல்லாமல் கொடைக்கானல், ராமேஸ்வரம் என விருப்பப்பட்ட பெண்களுடன் சுற்றுலா செல்பவர்களுக்கு கார் உட்பட ஏற்பாடு செய்து அனுப்பிவைக்கிறார்கள். இதற்காகப் பல வாட்ஸ்அப் குழுக்கள், இணையதளங்களை இவர்கள் நடத்திவருகிறார்கள்.

“வறுமையிலிருக்கும் அப்பாவிப் பெண்களைக் குறிவைத்தோம்!”

மதுரை நகரிலும் புறநகரிலும் கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில், கொரோனாவால் ‘டல்லடிக்க’ ஆரம்பித்தது. அங்கிருந்து தொடங்கியது ஒரு புது ஆபத்து. வெளிமாநிலப் பெண்களை அழைத்துவருவது, தங்கவைப்பது, ‘கைமாற்றுவது’ உள்ளிட்ட நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கலால், அப்பாவி உள்ளூர்ப் பெண்கள் மீது தரகர்களின் கவனம் திரும்பியது.

கொரோனா, தொடர்ச்சியான ஊரடங்கு என ‘குடும்பத்தின் வறுமையைச் சமாளிக்க ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா?’ எனத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவிப் பெண்களைக் குறிவைத்தார்கள். அவர்களின் வறுமையைக் கொண்டே அவர்களை அணுகி, நைஸாகப் பேசி மூளைச்சலவை செய்தார்கள். அந்தப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு, அவர்களைவைத்தே அவர்களுக்குத் தெரிந்த பெண்களையும் இந்த ஆபத்துக்குள் இழுத்தார்கள். சந்தேகம் வராத அளவுக்கு, குடியிருப்புப் பகுதிகளில் வீடெடுத்து, ஏதேனும் சிறு வியாபாரம் செய்வதுபோலக் காட்டிக்கொண்டு, வாடிக்கையாளர்களை வரவைத்தார்கள். பல சம்பவங்களில், இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களை காவல்துறை கைதுசெய்து அழைத்துச் செல்லும்போதுதான், அங்கு இந்தத் தொழில் நடந்த விவரமே அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது.

மதுரையில், ஆய்வாளர் தலைமையில் இயங்கும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், பாலியல் தொழில் செய்யும் இது போன்ற கும்பல்கள்மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். சமீபத்தில், மதுரை மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் தெப்பக்குளம் பகுதியில் ரெய்டுக்குச் சென்றபோது, பெண்களுடன் இருந்த தரகர்கள் பாண்டியராஜா, குணசேகரன் ஆகியோர் பிடிபட்டார்கள். ஏற்கெனவே ஹோட்டல்களில் வைத்து பாலியல் தொழில் செய்ததாக பாண்டியராஜா மீது வழக்குகள் உள்ளன. அவனிடம் நடத்திய ‘சிறப்பு’ விசாரணையில்தான், எம்.எல்.எம் பாணியில் நூற்றுக்கணக்கான பெண்களைப் பாலியல் கொடுமையில் தள்ளிய அதிர்ச்சிகர விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

“கஷ்டப்படுற உள்ளூர் பெண்களை குறிவெச்சோம்!”

‘‘முன்ன மாதிரி வெளி மாநிலப் பெண்களை அழைச்சுக்கிட்டு வந்து தொழில் நடத்த முடியலை. அவங்களுக்குத் தங்க இடம், சாப்பாடு, டிரெஸ், மருத்துவச் சிகிச்சைனு செலவு அதிகமாகுது. அது மட்டுமில்லாம, அவங்களைப் பாதுகாக்குறதும் கஷ்டமா இருக்கு. கஸ்டமரோட ஓடிப் போயிடுறாங்க... இல்லைன்னா, சொந்தமா வெளியூர்ல தொழிலை ஆரம்பிச்சுடுறாங்க. அதனால, இப்போ கொரோனாவால வருமானமில்லாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற உள்ளூர்ப் பெண்களைக் குறிவெச்சோம். ஒருமுறை தொழிலுக்கு வந்துட்டா அவங்க எங்கேயும் போயிட முடியாது; திரும்பவும் தொழிலுக்கு வர மாட்டேன்னும் சொல்ல முடியாது. உள்ளூர்ங்கிறதால வெளியே தெரிஞ்சாலோ, குடும்பத்தினருக்குத் தெரிஞ்சாலோ மானம் போயிடும்னே எங்க சொல்லுக்குக் கட்டுப்படுவாங்க” எனத் தன் கொடூர உத்தியை விளக்கமாக விவரித்திருக்கிறான் பாண்டியராஜா.

குடும்பத்தின் வறுமையைவைத்து அப்பாவிப் பெண்களை இந்தக் கொடுமைக்குள் தள்ளியதோடு, தொடர்ந்து இதில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, புதிதாகப் பெண்களை அழைத்துவரச் சொல்லி வற்புறுத்துவது எனப் பாலியல் தாதாவாகவே வலம்வந்திருக்கிறான் இந்த பாண்டியராஜா. ஏதோவொரு சூழ்நிலையில், வார்த்தையில் இவர்களின் வலையில் விழுந்து, பின் இவர்களிடமிருந்து தப்பிக்கவும் முடியாமல், வீட்டிலும் சொல்ல முடியாமல் தத்தளிக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் மன உளைச்சல் கொடுமையானது.

கைதாகியிருக்கும் மற்றொரு நபரான குணசேகரன், முதலில் பாண்டியராஜாவிடம் வாடிக்கையாளராக வந்து நட்பாகி, பின்பு அவனும் தொழில் பார்ட்னராகியிருக்கிறான். இது இப்படியே தொடர்ந்திருந்தால், இன்னும் பல நூறு பெண்களைப் படுகுழியில் தள்ளியிருப்பார்கள். போலீஸார் இவர்களின் நெட்வொர்க்கை ஆய்வுசெய்ததில், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பெண்களின் எதிர்காலம் கருதி, அவர்களை ரகசியமாக அழைத்த போலீஸார் எச்சரிக்கை விடுத்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

புரோக்கர்களின் உண்மை முகம்!

இந்த விவகாரத்தில், முக்கியமான தூண்டிலாக இருந்த விஷயம் எம்.எல்.எம் பாணியிலான நெட்வொர்க் கமிஷன்தான். முதலில், `உங்கள் கஷ்டம் தீரும்’ என்கிற ஆசைவார்த்தை. பின் `நீங்கள் தொழிலுக்கு வராமல் போனாலும், புதிதாக இரண்டு பேரைத் தொழிலுக்கு சேர்த்துவிட்டால் தொடர்ந்து உங்களுக்குக் கமிஷன் வரும்’ என்கிற கவர்ச்சியான ஏமாற்று வாக்குறுதி. இதை நம்பிச் செல்கிற பெண்கள், யதார்த்தத்தை உணர்ந்து வெளியேற முயலும்போதுதான், புரோக்கர்களின் உண்மை முகம் தெரியவரும். அதற்குள் அந்தப் பெண்கள் ஆபத்தின் வட்டத்துக்குள் வந்திருப்பார்கள். பிறகு அவர்களால் மீளவே முடியாமல் போய்விடுகிறது.

 ஃப்ளவர் ஷீலா
ஃப்ளவர் ஷீலா

பாண்டியராஜா மீது நடவடிக்கை எடுத்த ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா மாறுதலாகிவிட்ட நிலையில், தற்போதைய ஆய்வாளர் ஃப்ளவர் ஷீலாவிடம் பேசினோம். ‘‘நான் பொறுப்பேற்ற பிறகும் இரண்டு இடங்களில் பாலியல் தொழில் செய்த புரோக்கர்களைப் பிடித்திருக்கிறோம். இது போன்ற வழக்குகளில் சிக்கும் பெண்கள் சொல்லும் ஒரே காரணம், வறுமைதான். அதனாலேயே, இதை ஒரு சமூகப் பிரச்னையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. மதுரையில் இதுபோலப் பெண்களை ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதுமட்டுமல்லாமல், இது போன்ற கும்பல்களின் ஆன்லைன் நெட்வொர்க்கையும் கவனித்துவருகிறோம்’’ என்றார்.

கொரோனா பேரிடர் ஏற்படுத்திச் சென்றிருக்கும் வேலை இழப்பு, வருமான இழப்பு உட்பட பல இழப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவி ஏழைப் பெண்களைப் பாலியல் தொழில் எனும் படுகுழியில் தள்ளிவிடும் கொடூரர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism