Published:Updated:

இரவு 11 மணி... நிலைகுலைய வைத்த அம்மிக்கல்! - மதுரை ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த துயரம்

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

அற்ப காரணங்களுக்காகவும் பழிக்குப் பழியாகவும் தினம்தோறும் கொடூரக் கொலைகள் நடப்பதால், மதுரை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா
ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா

டீக்கடைக்காரர் கொலை நிகழ்ந்த சில நாள்களில், சேவல் சண்டையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஓடஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சண்டை சேவலுடன் ராஜா
சண்டை சேவலுடன் ராஜா

மதுரை புதூர் ராமவர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சேவல் சண்டை விடுவதிலும் தீவிரமாக இருந்து வந்துள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் தன் கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, புதூர் பாரதியார்புரம் பகுதியில் மறைந்திருந்த மர்மக் கும்பல் ஒன்று, அவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது அம்மிக்கல்லை வீசி அவரை நிலைகுலைய வைத்துள்ளது.

உயிரை காப்பாற்றிக்கொள்ள இறங்கி ஓடியவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது கும்பல். கொலையைப் பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ராஜா
ராஜா

அதன் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2016-ம் ஆண்டு சேவல் சண்டை போட்டியில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் ராஜா ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் வகையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையரின் தலைமையில் தனிப்படை போலீஸார் இக்கொலையில் ஈடுபட்ட மர்மக் கும்பலைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சில இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் கடந்த 8 நாள்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. அற்ப காரணங்களுக்காகக் கொலை செய்வது, கூலிக்கு கொலை செய்வது என்று சில கும்பல்கள் புதிதாக உருவாகி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.