டோல்கேட்டில் கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு கடந்த 20-ம் தேதி இரவு தென்காசி மாவட்டம் சுரண்டை யைச் சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார், பொன்ராஜ் ஆகியோர் TN 69 A 8313 என்ற எண் கொண்ட பொலிரோ வாகனத்தில் வந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டோல்கேட்டை கடக்க முயலும்போது அங்கு பணியில் இருந்த ராஜா என்பவர் டோல் கட்டணம் கேட்க, வாகனத்தில் இருந்த மூன்று நபர்களும் தர முடியாது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து ஊழியர் கேட்க கையில் வைத்திருந்த ஏர் கன் மற்றும் பிஸ்டலை காண்பித்து, 'எங்களிடமே பணம் கேட்கிறாயா, உன்னை சுட்டு விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர்.

இவர்களின் மிரட்டல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் சத்தம் கொடுக்க உடனே அங்கிருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளனர்.
உடனே டோல்கேட் நிர்வாகத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பரபரப்பு ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி அறிந்த மதுரை எஸ்.பி.பாஸ்கரன் உடனே வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடிப்பிடிக்க திருமங்கலம் போலீஸுக்கு உத்தரவிட்டார்.
டோல்கேட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோதுதான் தென்காசி மாவட்டம் சுரண்டை யைச் சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார் பொன்ராஜ் ஆகியோர் அந்த வாகனத்தில் வந்ததும், துப்பாக்கியை எடுத்துக் காட்டுவதும் தெரிந்தது.

உடனே போலீஸ் அவரகளைத் தேட, அவர்கள் மூவரும் மதுரைக்கு செல்லும் வழியில் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மூவரும் சுரண்டையில் பால் வியாபாரம் செய்வதாகவும், ஜெயக்குமாரின் துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வாங்க மதுரை சென்றதாகவும், மது அருந்தியிருந்ததால், டோல்கேட்டில் கட்டணம் கேட்ட ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும், டேல்கேட் ஊழியர் பயந்து ஓடியதால் அங்கிருந்து மதுரைக்கு கிளம்பியதாகவும், வழியில் டீக்கடையில் நின்றபோது போலீஸ் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
தற்போது அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, ஏர்கன் ஆகியவைகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
2019-ல் சென்னையை சேர்ந்த ரெளடிகள் சிலர் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் கட்ட மறுத்து துப்பாக்கி எடுத்து சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.