Published:Updated:

மதுரை : தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்... சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

தற்கொலை செய்துகொண்ட அங்கயற்கண்ணி
தற்கொலை செய்துகொண்ட அங்கயற்கண்ணி

செக்கானூரணியை சேர்ந்த வீரர் சிவராஜாவுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அங்கயற்கண்ணி என்ற மனைவியும் 6, 2 வயதில் இரு குழந்தைகளும் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அவர் குடும்பம் நிலை குலைந்தது.

தீ விபத்தில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த தீயணைப்பு வீரர் மனைவி அங்கயற்கண்ணி, தனது குழந்தைகளைத் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

`தீபாவளி நாளில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்கள்; காரணம் யார்..?!’ -  கொதிக்கும் மதுரை மக்கள்

கடந்த தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் எதிர்பாராதவிதமாக நான்கு தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்டனர்.

அவர்களில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள். தீபாவளி அன்று நடந்த இந்தச் சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதில் திருப்புவனத்தை சேர்ந்த வீரர் கிருஷ்ணமூர்த்திக்குத் திருமணம் ஆகவில்லை.

சிவராஜா, அங்கயற்கண்ணி , குழந்தைகள்
சிவராஜா, அங்கயற்கண்ணி , குழந்தைகள்

செக்கானூரணியைச் சேர்ந்த வீரர் சிவராஜாவுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, அங்கயற்கண்ணி என்ற மனைவியும் 6, 2 வயதுகளில் இரு குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அவர் குடும்பம் நிலை குலைந்தது.

அரசாலும், தீயணைப்புத்துறையாலும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டாலும், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டாலும், கணவரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கவலையில் தவித்துவந்தார் அங்கயற்கண்ணி.

செக்காணூரனியில் மாமனார் வீட்டில் வசித்துவந்தவர், யாரிடமும் பேசாமல் தனித்து இருந்திருக்கிறார். அவரின் கவலையை மாற்றும் வகையில் நாகமலை புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

ஆனால், அங்கு வந்தும் அவர் இயல்புநிலைக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உடல் நலமில்லாத மூத்த மகனை மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில், இரண்டு வயது குழந்தையுடன் வீட்டிலிருந்த அங்கயற்கண்ணி, குழந்தையைத் தன் பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்றிருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அறைக்குள்ளிருந்து அங்கயற்கண்ணி வெளியே வராததைப் பார்த்து பதறிய அவர் பெரியம்மா, கதவைத் தட்டியும் எந்த பதிலும் இல்லாததால் அருகிலுள்ள வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

மதுரை தீ விபத்து
மதுரை தீ விபத்து

அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கயற்கண்ணி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனால் அவர் குடும்பத்தினரும் அந்தப் பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கணவரின் திடீர் மறைவு பேரிழப்புதான் என்றாலும், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காமல் விபரீத முடிவை எடுத்திருக்கிறார் அங்கயற்கண்ணி என உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.

அவர் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் நாகமலை காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு