Published:Updated:

தஞ்சாவூர் : ` போலீஸ் தாக்கியதாகப் புகார் '- விசாரணைக் கைதி மரணத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை!

போலீஸ் ஸ்டேஷனில் மரணம் அடைந்த கைதி சத்தியவாணன்
போலீஸ் ஸ்டேஷனில் மரணம் அடைந்த கைதி சத்தியவாணன் ( ம.அரவிந்த் )

சத்தியவாணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் கோபடமடைந்த போலீஸ் எஸ்.ஐ டேவிட் சத்தியவாணனை அடித்ததில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இளைஞர் ஒருவரைப் போலீஸ் விசாரணை செய்துவந்த நிலையில் மரணம் அடைந்தார். உண்மையைப் பெறுவதற்காக போலீஸ் விசாரித்ததில் அதனைத் தாங்கமுடியாமல் அந்த இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சடலமாக சத்தியவாணன்
சடலமாக சத்தியவாணன்

தஞ்சாவூர் அருகே உள்ள சீதா நகரில் வசிக்கும் சாமி நாதன் என்பவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ 7 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுவாமி மலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஆரோக்கியசாமி டேவிட் என்பவர் தஞ்சாவூர் நகர காவல் நிலையங்களில் நடைபெறும் குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதற்கானத் தனிப்படை எஸ்.ஐ யாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சாமி நாதன் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இந்த திருட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தாண்டவன் குளத்தைச் சேர்ந்த சத்தியவாணன் என்பவருக்குத் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சத்தியவாணன் காவல்துறை ரொக்கார்டில் உள்ள குற்றவாளி என்பதுடன் தஞ்சாவூர், ஈரோடு, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதும் தெரிய வந்தது.

மாஜிஸ்திரேட் விசாரணை
மாஜிஸ்திரேட் விசாரணை

இதனையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நின்றுகொண்டிருந்த சத்தியவாணனைத் தனிப்படை எஸ்.ஐ ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான போலீஸார் கைது செய்து மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து பூக்காரத்தெருவைச் சேர்ந்த சூர்யா மற்றும் அஷ்ரப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து சத்தியவாணனிடம் விசாரித்துள்ளார் ஆரோக்கியசாமி டேவிட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது சத்தியவாணன் நகை மற்றும் பணம் சூர்யாவிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சூர்யாவிடம் கேட்டதற்குத் தன்னிடம் இல்லை என எஸ்.ஐ டேவிட்டிடம் கூறியுள்ளார். இதில் கோபமான டேவிட் சத்தியவாணனை அடித்ததால் சத்தியவாணன் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்படுகிறது . இச்சம்பவம் தஞ்சை வட்டாரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விபரம் அறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம், "சத்தியவாணனைக் கைது செய்து அழைத்துச் சென்றதுமே மேற்கு காவல் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் டேவிட் தங்கள் பாணியில் கவனித்துள்ளார். மதியம் 12 மணியளவில் சத்தியவாணன் போலீஸ் ஒருவரைத் தாங்கி பிடித்து கொண்டு நடந்து சென்றதை சிலர் பார்த்துள்ளனர். அதன் பிறகு மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீதேவி பணி நிமித்தமாக சென்னை செல்வதாகக்கூறிய நிலையில் சத்தியவாணனை அனைத்து மகளில் காவல் நிலையத்தின் பின்புறம் அருகே உள்ள தனி அறை ஒன்றிற்கு டேவிட் அழைத்துச் சென்றனர்.

அந்த இடத்தில் வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டார். வல்லம் காவல் நிலைய தனிப்படை எஸ்.ஐயான சந்திரசேகரன் மற்றொரு எஸ்.ஐயான டேவிட்டின் நண்பர் என்ற முறையில் அவருக்கு உதவுவதற்காக விசாரணையில் தானும் பங்கெடுத்துள்ளார். சத்தியவாணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் கோபடமடைந்த டேவிட் சத்தியவாணனை அடித்துள்ளார்.

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை
மேற்கு காவல் நிலையம்
மேற்கு காவல் நிலையம்

ஏற்கெனவே கஞ்சா உள்ளிட்ட பழக்கத்துக்கு ஆளாகியிருந்த சத்தியவாணனின் உடல் அடியைத் தாங்க முடியாமல் சோர்ந்து போய்விட்டது. இதையடுத்து கொஞ்ச நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சத்தியவாணனைப் பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார், எஸ்.பி ரவளிப்பிரியா ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் வைத்து ஆரோக்கிய சாமி டேவிட்டிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சத்தியவாணன் சம்பவ இடத்தை காண்பிப்பதாகக் கூறினார் அதனை உறுதி செய்வதற்காக சத்தியவாணனை அழைத்து சென்று போலீஸ் டீமுடன் சென்றோம். சிவாஜி நகர் ரயில்வே லைனை கடக்கும்போது மூன்று முறை சத்தியவாணன் தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.

போலீஸ் உஅயர் அதிகாரிகள் விசாரணை
போலீஸ் உஅயர் அதிகாரிகள் விசாரணை

``ஏன் விழுகிறார்" எனக் கேட்டதற்கு, எனக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது கஞ்சா அடிக்காததால் விழுவதாகத் தெரிவித்தான். பின்னர் சம்பவ இடத்தைப் பார்த்து விட்டு மேம்பாலம் வழியாக வரும்போது நெஞ்சு வலிப்பதாகக் கூறினான் பின்னர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ``பல்ஸ் குறைந்து விட்டது வேகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றனர் மருத்துவர்கள். அங்கு சென்றதும், அவனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாகத் தெரிவித்தார் என விசாரணையில் கூறியிருக்கிறார்.மேலும் இதனையே தன்னுடைய புகார் மனுவிலும் தெரிவித்துள்ளார்.

இது அப்படியே எப்.ஐ.ஆரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தியவாணன் சகோதரி சண்முக பிரியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரிடமும் போலீஸ் தரப்பிடமும் மாஜிஸ்திரேட் முகமது அலி விசாரணை மேற்கொண்டார். பின்னர் சத்தியவாணன் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சண்முக பிரியா சத்தியவாணன் உடலை தஞ்சாவூரிலேயே தகனம் செய்துவிட்டுச் செல்வதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தார். மேற்கொண்டு விசாரணைக்குப் பிறகே இந்த வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும். " என தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு