Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்; செருப்பால் அடித்த நபர்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மருத்துவமனை
மருத்துவமனை

மகாராஷ்டிராவில் கொரோனா இல்லை என்று கூறி சான்றிதழ் கொடுத்த மருத்துவரைச் செருப்பால் அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்துவருகிறது. இதனால் கொரோனா சோதனைகள் தொடர்ந்து அதிக அளவில் எடுக்கப்பட்டுவருகிறன்றன. மகாராஷ்டிராவின் கோண்டியா என்ற இடத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு ராஜேஷ் துபே என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேருடன் கொரோனா சோதனைக்கு வந்திருந்தார். மருத்துவமனையில் நான்கு பேருக்கும் அங்கிருந்த டாக்டர் சோதனை நடத்தினார். அதில் துபே குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாசுட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆனால் துபேவுக்கு மட்டும் கொரோனா இல்லை என்று வந்தது. இதனால் கடும் கோபமடைந்த துபே தவறான பரிசோதனை அறிக்கை கொடுப்பதாகக் கூறி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொரோனா
கொரோனா

`குடும்பத்தில் மூன்று பேர் கொரோனா பாதித்துள்ள நிலையில் எனக்கு மட்டும் எப்படி கொரோனா இல்லாமல் இருக்கும்’ என்று கேட்டு டாக்டரை அடித்து உதைக்க ஆரம்பிதார். டாக்டரின் சட்டை காலரை பிடித்துக்கொண்டு வெளியில் தரதரவென்று இழுத்து வந்து சரமாரியாக அடித்தார். துபேயின் குடும்ப உறுப்பினர்கள் டாக்டரை விடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அதை அவர் கேட்கவில்லை. இறுதியில் மருத்துவமனையிலிருந்த மற்றவர்கள் போராடி டாக்டரை மீட்டனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

அப்படி இருந்தும் துபேயின் கோபம் அடங்கவில்லை. சில நிமிடங்களில் டாக்டரின் அறைக்குள் நுழைந்து மீண்டும் டாக்டரைக் கண்டபடி செருப்பால் அடித்து உதைத்தார். இதையடுத்து டாக்டர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து துபேயைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மருத்துவமனையிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கின்றன. நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையைத் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு