Published:Updated:

தென் ஆப்பிரிக்கா: 'பண மோசடி வழக்கு; மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை!'

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி லதா ராம்கோபின்
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி லதா ராம்கோபின்

தென் ஆப்பிரிக்காவில்  மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின்  2015-ல் பண  மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை ஆர்வலராகவும், சமூகச் செயல்பாட்டாளராகவும் அறியப்படுபவர் மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவரின் மகள் பெயர் ஆஷிஷ் லதா ராம்கோபின் (வயது 56). தென் ஆப்பிரிக்காவில் ராம்கோபின் 'அகிம்சைக்கான சர்வதேச மையம்' என்ற நிறுவனத்தை நிறுவி, அதன் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்துவருகிறார். காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு எதிராக 2015-ல் டர்பன் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு ஒன்று பதிவானது. அந்த வழக்கில் லதா இந்தியாவிலிருந்து சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் 3.33 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2015-ல் தொடங்கிய இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு நீதிமன்றம் அபராதத்துடனான ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

ஆனால், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்தநிலையில், விசாரணை முழுமையாக நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. டர்பன் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வெளியான தீர்ப்பில் ஆஷிஷ் லதா ராம்கோபின், மகாராஜிடம் போலியான ஆவணங்களைக் கொடுத்து பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் நீதிபதிகள் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தனர், மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷா மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் தன் தாயார் எலா காந்தியைப்போலவே தன்னையும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் என்று கூறிவந்த ஆஷிஷ் லதா கோபின் பண மோசடி வழக்கில் கைதாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு