Published:Updated:

`2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்!' -பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி

லாரியில் இரும்பு லோடை ஏற்றியபிறகு கேசவலு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மற்ற மூவரும் குடிகண்ட்லா கிராமத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுள்ளனர்.

பெண் டாக்டர்
பெண் டாக்டர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர், மூன்று நாள்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர்கள் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற முழக்கம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

பெண் டாக்டர் கொலை
பெண் டாக்டர் கொலை

இந்தக் குற்றத்தைச் செய்த முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தெலங்கானா போலீஸார் மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் ஆரீஃப் இரண்டு வருடமாக லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கி வந்திருக்கிறார். தனது லைசென்ஸைப் புதுப்பிக்காமல் இரண்டு வருடங்களாக போலீஸிடம் சிக்காமல் பயணம் செய்த அவர், பெண் மருத்துவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் போலீஸிடம் சிக்கியுள்ளார். இருந்தும் அப்போது போலீஸிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``24-ம் தேதி கர்நாடகாவின் கங்காவதியிலிருந்து செங்கல் லோடை ஏற்றிக்கொண்டு ஆரீஃப்பும் கிளீனர் சிவாவும் ஹைதராபாத் நோக்கிப் பயணம் செய்தனர். அப்போது மற்ற இருவரையும் போன் செய்து அழைத்த ஆரீஃப், தெலுங்கானாவின் குடிகண்ட்லா கிராமத்துக்கு வரும்படி அழைப்புவிடுத்துள்ளார். அவர்கள் வைத்திருந்த இரும்புக் கம்பிகளை சட்டவிரோதமாக அங்கிருந்து ஹைதராபாத் கொண்டுசெல்வதே அவர்களின் திட்டமாக இருந்துள்ளது. அதன்படி இரும்பு லோடை லாரியில் ஏற்றியபிறகு கேசவலு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மற்ற மூவரும் குடிகண்ட்லா கிராமத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுள்ளனர். மஹ்புப் நகர் வழியாகச் செல்லும்போது போக்குவரத்து போலீஸார் லாரியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன்
முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன்

அதுவும் 25-ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் போக்குவரத்து போலீஸார், ஆரீஃப் உள்ளிட்ட மூவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்களைச் சோதனை செய்தபோது ஆரீஃப்பிடம் லைசென்ஸ் இல்லையென்பது தெரியவந்ததும் அதிகாரிகள் வண்டியைக் கைப்பற்ற முடிவெடுத்தனர்.

இதை அறிந்துகொண்ட ஆரீஃப் அதிகாரிகளிடம், `லாரியை நகற்ற முடியாது, செல்ஃப் ஸ்டார்ட் கிடையாது' எனக் கூறியதுடன் செல்ஃப் ஸ்டார்ட் கேபிளையும் வண்டியிலிருந்து பிடுங்கிவிட்டுள்ளார். இதனால் லாரியை எடுக்க முயன்று தோற்றுப்போன அதிகாரிகள் மற்றொரு வழக்கை விசாரித்துள்ளனர். அப்போது ஆரீ ஃப் லாரியுடன் தப்பி ஓடிவிட்டார்.

`இரவு 12 மணிக்கு வந்து 3 மணிக்கு சென்றுவிட்டான்!’ - ஹைதராபாத் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தாய்

பின்னர், அந்த இரும்புப் பொருள்களை விற்றுவிட்டு நவம்பர் 26ம் தேதி இரவு 9 மணியளவில் நான்கு பேரும் ஷம்ஷாபாத்தை அடைந்து சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தூங்கிவிட்டனர். மறுநாள் காலை 9 மணியளவில் ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தச் சொல்லியுள்ளது.

ஷம்ஷாபாத்தைவிட்டு வெளியேறுவதற்கு பதிலாக நால்வரும் பெண் மருத்துவர் டூவீலர் நிறுத்தியிருந்த தொண்டுபள்ளி டோல்கேட்டுக்குச் சென்று அங்கு லாரியை நிறுத்தியுள்ளனர். அங்குதான் பெண் மருத்துவரிடம் கொடூரத்தைக் காட்டியுள்ளனர்" எனக் கூறியுள்ளனர்.

லாரி
லாரி

பெண் மருத்துவர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரீஃப் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உரிமம் இல்லாமல் லாரியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்பதும் பெண் மருத்துவர் கொல்லப்பட்டு சுமார் 48 மணி நேரம் வரை அவர் பிடிபடவில்லை என்பதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

`யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை’ - ஹைதராபாத் மருத்துவர் விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்டு!