Published:Updated:

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70,000 குற்ற வழக்குகள் அதிகம்.. எங்கே செல்கிறது நாடு? #VikatanInfographics

இந்தியாவில் நிகழும் குற்றங்களை ஆண்டுதோறும் வெளியிடும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2018-ம் ஆண்டு, நாடு முழுவதும் நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய தரவுகளை மாநில வாரியாக வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் தமிழகம் குற்றச் செயல்கள் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் உள்ளது.

குற்றங்கள்
குற்றங்கள்

கொலை, கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் சம்பவங்களும் சகஜமாக மாறிவரும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஊரும் பெயரும் மட்டும் மாறி, அன்றாட செய்திகளில் ஒன்றாக ஊறிப்போன இவைகள்தாம், ஒரு நாடு எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வர வைக்கிறது.

இந்தியாவில் நிகழும் குற்றங்களை ஆண்டுதோறும் வெளியிடும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2018-ம் ஆண்டு, நாடு முழுவதும் நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய தரவுகளை மாநில வாரியாக வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் தமிழகம் குற்றச் செயல்கள் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் முன்னணி இடத்தைப் பெறுகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70,000 குற்ற வழக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

குற்றங்கள்
குற்றங்கள்

2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டு மொத்த குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கையிலும் அதிகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வேலையின்மை மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வைக் காரணமாகச் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவில் 2018-ல் மட்டும் 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் 1.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2018-ல் மட்டும் 1,631 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தகராறு காரணமாக 9,623 கொலைகள் நடந்துள்ளன. தனிப்பட்ட விரோதம் மற்றும் தனிப்பட்ட பகை மூலமாக 3,875 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2018-ல் முதியவர்கள் அதிகம் கொல்லப்பட்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது, இந்தியாவிலேயே அதிகமாக 152 முதியவர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது, சொத்து அபகரிப்புக்காகக் குடும்பத்தார்களைக் கொன்ற வழக்குகள் இதில் அதிகம். வகுப்புவாத காரணங்களால் நிகழும் கும்பல் படுகொலைகள் குறித்த தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெறாமல் போனது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

இந்தியா குற்றங்கள்
இந்தியா குற்றங்கள்

2017-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 32,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 93.1 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 3,000 பேர் குடும்ப நபர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள், கணவரின் நண்பர்கள் முன்னாள் கணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் 10,000 பேர். இப்படி மொத்தம் 30,000 பேர் முன்பின் தெரிந்தவர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 44,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.

தமிழ்நாடு - குற்றங்கள்
தமிழ்நாடு - குற்றங்கள்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் மட்டுமன்றி, அரசுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள், அரசு கைப்பற்றிய பொருள்கள் குறித்த தகவல்கள், பாதுகாப்பான நகரங்கள் முதலான அனைத்துத் தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குற்றங்களை இனிவரும் காலங்களில் தடுப்பதற்கு அரசு தனது கொள்கைகளை வகுக்க இத்தகைய தரவு சேகரிப்பு உதவும் என்பதாலேயே, ஆண்டுதோறும் இந்தப் பணி நடைபெறுகிறது. எண்களாக நாம் பார்க்கும் இந்தக் குற்றத் தகவல்கள் நம் நாட்டில் பாதுகாப்பான வாழ்வை வாழமுடிகிறதா என்பதை நமக்கு எடுத்துக்கூறுவது மட்டுமன்றி நம் வல்லரசு கனவெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு அமைதியான பாதுகாப்பான வாழ்வை ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் என்பதை பொட்டில் அடித்துக் கூறுகிறது.

- ஜான் ஜே.ஆகாஷ்

அதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!