Published:Updated:

ஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு! - தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண்

இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார்.

Bodi Police Station
Bodi Police Station

ஃபேஸ்புக் வழியாக மலேசியப் பெண்ணைக் காதலித்த தேனி இளைஞரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் 9 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

Ashok Kumar
Ashok Kumar

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நேரு என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 28). ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர், முகநூல் வழியாக மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அசோக்குமாரை சந்திப்பதற்காகத் தேனி வந்துள்ளார் அமுதேஸ்வரி. இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த அமுதேஸ்வரி, மலேசியாவுக்குத் திரும்பிச் சென்றார். தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, அமுதேஸ்வரியின் தொடர்பைத் துண்டித்துள்ளார் அசோக்குமார்.

விக்னேஸ்வரி
விக்னேஸ்வரி

பின்னர், கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக்குமாரை தொடர்புகொண்ட ஒரு பெண், `நான் அமுதேஸ்வரியின் அக்கா. நீ ஏமாற்றியதால் அவள் தற்கொலை செய்துகொண்டாள்' என்றும் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அசோக்குமார், தன்னை விட்டுவிடும்படி அப்பெண்ணிடம் கெஞ்சியுள்ளார். அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், `நான் தேனி வருகிறேன். என்னை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேள்' எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு அசோக்குமாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் தேனி வந்துள்ளார். பின்னர், தனியார் விடுதிக்கு அசோக்குமாரை வரச்சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற அசோக்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அங்கு இருந்தது இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட அமுதேஸ்வரி.

போடி காவல்நிலையம்
போடி காவல்நிலையம்

`உன்னை சந்திக்கத்தான் அப்படிப் பொய் சொன்னேன். என்னை ஏன் ஏமாற்றினாய்... என்னைக் கல்யாணம் செய்துகொள். இல்லையென்றால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன்' என அமுதேஸ்வரி கூறியிருக்கிறார். இதனால் பயந்துபோன அசோக்குமார். தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட அமுதேஸ்வரியை அழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பது தெரியவந்தது.

காவல்நிலையத்திலேயே போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அசோக்குமாரின் வீட்டுக்குச் சென்ற அப்பெண், தனக்கும் அசோக்குமாருக்கும் திருமணம் செய்துவைக்கும்படி கூறியுள்ளார். இதை அசோக்குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிய அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸார், ஏற்கெனவே தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சமாதான முயற்சி பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். பின்னர், வீரபாண்டி காவல்நிலையத்திலும் சமாதான முயற்சிகள் நடக்கவே, `அசோக் மீது வழக்கு பதிவு செய்தால்தான் மலேசியா செல்வேன்' என அந்தப் பெண் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

காதலனிடம் நியாயம் கேட்க மலேசியாவில் இருந்து தேனி வந்திருக்கிறார் என்றால், அசோக்குமாரை விடமாட்டார் எனக் கணித்திருந்தோம்.
போலீஸார்

முடிவில், அசோக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், சமாதானம் அடைந்த விக்னேஷ்வரி, மலேசியா திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திருந்த சிலரை பிடித்துப் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமாரை கொலை செய்ய வந்ததும் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இதுதொடர்பாகப் பேசிய போலீஸார், ``அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேசப்பட்ட சமாதான முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. யார் மீது தவறு இருக்கிறது என்று பார்த்து நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். காதலனிடம் நியாயம் கேட்க மலேசியாவில் இருந்து தேனி வந்திருக்கிறார் என்றால், அசோக்குமாரை விடமாட்டார் எனக் கணித்திருந்தோம். எனவேதான் அப்பெண்ணை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தோம். அதன் விளைவாகத்தான் கூலிப்படையினரை பிடிக்க முடிந்தது. ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.