Published:Updated:

மலேசிய இளைஞர் பூட்டிய வீட்டுக்குள் கொலை? - சிவகங்கையிலிருந்து கூரியரில் வந்த சாவி

பூட்டிய வீட்டில் இளைஞர் மரணம்
பூட்டிய வீட்டில் இளைஞர் மரணம்

நண்பருடன் தங்கியிருந்த மலேசிய இளைஞர், பூட்டிய வீட்டுக்குள் மர்மான முறையில் இறந்துகிடந்தார். அவருடன் தங்கியிருந்த நண்பர் தலைமறைவாக இருந்துவருகிறார்.

பூட்டிய வீடு

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான வீடு பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூா் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 2-வது தளத்தில் உள்ளது. அந்த வீட்டை குமார், ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சிவகங்கையைச் சேர்ந்த இன்ஜினீயர் சேதுபதி, அவரின் சகோதரர் வெங்கடேசன் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ஊரடங்கு காரணமாக சேதுபதியும் வெங்கடேசனும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.

பொழிச்சலூர்
பொழிச்சலூர்
மதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதுதான் மதனின் நண்பன் பழனிமுருகன், இந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார். பழனிமுருகனின் அம்மா, சகோதரி மலேசியாவில் இருந்ததாகக் கூறுகின்றனர். மலேசியாவில் மதன் பணியாற்றிய காலத்தில்தான் பழனிமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ்

இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள், கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி அதை சுத்தப்படுத்தினர். அதன்பிறகும் துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து, எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என குடியிருப்பில் வசித்தவர்கள் ஆய்வு செய்தபோது 2-வது தளத்தில் உள்ள சேதுபதி, வெங்கடேசன் தங்கியிருந்த வீட்டிலிருந்து வருவதைக் கண்டறிந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், சேதுபதி, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார்.

கூரியர் மூலம் சென்னைக்கு வந்த சாவி! 

இதையடுத்து, சிவகங்கையிலிருந்து வீட்டின் சாவியை கூரியர் மூலம் சென்னைக்கு வெங்கடேசன் அனுப்பிவைத்துள்ளார். சாவி கைக்கு வந்ததும், வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, படுக்கையறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அருகே சென்று பார்த்தபோது, நிர்வாணமாக அழுகிய நிலையில் ஒருவர் இறந்துகிடந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், சிவகங்கையிலிருந்த வெங்கடேசனுக்கும் சேதுபதிக்கும் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், வீட்டில் மதன் என்பவர் தங்கியிருந்தார். அவர்தான் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எங்களிடம் கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றார் என்று தெரிவித்துள்ளனர்.

கூரியரில் அனுப்பப்பட்ட சாவி
கூரியரில் அனுப்பப்பட்ட சாவி

இந்தச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர், சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யாரென்று மதனிடம் போலீஸார் போனில் விசாரித்தனர். அப்போது, இறந்தவர் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த பழனிமுருகன் (35) எனத் தெரியவந்தது. பூட்டிய வீட்டுக்குள் இளைஞர், நிர்வாண நிலையில் இறந்தது எப்படி என போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நண்பர்கள்

இதுகுறித்து சங்கர் நகர் போலீஸார் கூறுகையில், ``சேதுபதியும் வெங்கடேசனும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த வீட்டில் குடியிருந்துவருகின்றனர். இவர்களின் நண்பர் மதன், ஓராண்டுக்கு முன் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஊரடங்கையொட்டி சேதுபதியும் வெங்கடேசனும் ஊருக்குச் சென்றதால், மதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதுதான் மதனின் நண்பன் பழனிமுருகன் இந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார். பழனிமுருகனின் அம்மா, சகோதரி மலேசியாவில் இருந்ததாகக் கூருகின்றனர். மலேசியாவில் மதன் பணியாற்றிய காலத்தில்தான் பழனிமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழனி முருகன்
பழனி முருகன்
`வீல்சேர் அம்மா... பாசக்கார மகன்...' - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

ஊரடங்கையொட்டி மலேசியாவிலிருந்து சென்னை வந்த பழனிமுருகன், மீண்டும் அங்கு செல்ல முடியவில்லை. அதனால்தான் மதனுடன் பழனிமுருகன் தங்கியிருந்துள்ளார். கடந்த மாதம், சென்னை வீட்டை பூட்டிவிட்டு மதன், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். சாவியை சேதுபதி, வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார். ஆனால், வீட்டில் பழனிமுருகன் தங்கியிருந்த விவரத்தை சேதுபதி, வெங்கடேசனிடம் கூறவில்லை. தற்போது மதனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனிமுருகன் பூட்டிய வீட்டுக்குள் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை" என்றனர்.

தலைமறைவாக இருக்கும் மதன், வாயைத் திறந்தால் மட்டுமே பழனிமுருகன் மரணத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரும். போலீஸ் விசாரணைக்கு மதன் ஆஜராகாததால், பழனிமுருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவர்மீது எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு