Published:Updated:

கப்பலில் தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்!- தூத்துக்குடியில் சிக்கினார்

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் கஃபூர், சட்டவிரோதமாக சரக்குக் கப்பலில் தூத்துக்குடிக்குள் நுழைந்ததால் கடலோரப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

அகமது அதீப் கஃபூர்
அகமது அதீப் கஃபூர்

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணல், கல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்கள் சிறிய சரக்குக்கப்பலில் மாலத்தீவிற்கு ஏற்றிச் செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இந்தோனோஷியாவைச் சேர்ந்த 8 கப்பல் ஊழியர்கள், ஒரு தமிழர் உட்பட 9 பேர் கருங்கற்களை ஏற்றிக் கொண்டு விர்கோ 9 என்ற பார்ஜியா வகையிலான சிறு கப்பல், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்குப் புறப்பட்டது.

விர்கோ 9 என்ற பார்ஜியா வகையிலான சிறு கப்பல்
விர்கோ 9 என்ற பார்ஜியா வகையிலான சிறு கப்பல்

கருங்கற்களை இறக்குமதி செய்துவிட்டு, கடந்த 27-ம் தேதி அங்கிருந்து புறப்பட்ட விர்கோ 9 கப்பல், தூத்துக்குடி கடலோர எல்லைப் பகுதிக்கு அருகில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அக்கப்பலில் ஊழியர்கள் 9 பேருடன் கூடுதலாக ஒரு நபர் இணைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தூத்துக்குடி பழைய துறைமுகக் கடல் எல்லைப் பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது.

அதன்படி கடலோரக் காவல்படை மற்றும் சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த 10-வது நபரின் பெயர் அகமது அதீப் கஃபூர் எனவும், அவர் மாலத்தீவின் 33 ஆண்டுக்கால சிறைத்தண்டனைக் கைதி எனவும், அத்துடன் அவர் அந்நாட்டின் துணை அதிபராகவும் இருந்தவர் எனவும் தெரியவந்தது.

போலீஸ் வாகனம்
போலீஸ் வாகனம்

2015ம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அகமது அதீப். 2015-ம் ஆண்டு மாலத்தீவின் அப்போதைய அதிபர் அப்துல்லா யமீன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் அதே ஆண்டில் அகமது அதீப் கைது செய்யப்பட்டுள்ளார். அதே ஆண்டு நவம்பர் 5-ம் தேதி துணை அதிபர் பதவியிலிருந்து அதீப் நீக்கப்படுகிறார். பின் டொனிடோ சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால் அவர் விடுவிக்கப்பட்டாரா அல்லது தப்பி வந்தாரா எனத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் எனச் சொல்லப்படுகின்றன. சட்டவிரோதமாக சரக்குக் கப்பலில் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் நுழைந்த இச்சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.