திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ளது பர்வதமலை. சுமார் 4,560 அடி உயரமுள்ள இம்மலை, ஆன்மிகச் சிறப்புகொண்ட பிரசித்திபெற்ற இடங்களில் ஒன்று. இந்த மலையின் மீது செல்லும் பாதையில், நேற்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், அங்குள்ள ஒரு மரத்தில் ஆண், பெண் இருவர் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கடலாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அழுகிய நிலையில் இருந்த இரு உடல்களையும் மீட்டு டோலி மூலம் மலையடிவாரத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பிவைத்துள்ளனர். தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இவ்விருவரும், உயிரிழந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட பையிலிருந்து கிடைத்த அடையாள அட்டைகளை வைத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் - அண்ணா நகரைச் சேர்ந்த ராஜசேகர் (43) என்பதும், பள்ளிக்கரணைப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்குக் கடலாடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, சுமார் 40 தினங்களுக்கு முன்பே இவ்விருவரும் வீட்டிலிருந்து மாயமானதும், அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இருவரும் தேடப்பட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், பிரின்டிங் பிரஸ்வைத்து நடத்திவந்த ராஜசேகருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை செய்துவந்த ரேகாவுடன் அவருக்குத் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சுமார் 40 நாள்களுக்கு முன்பாக இருவரும் மாயமாகியிருக்கிறார்கள். இருவரும் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த நிலையில், தற்போது உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவரும் கடலாடி போலீஸார் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைக் கைப்பற்றி... இது தற்கொலைதானா... அல்லது இருவரின் மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர். ஆண், பெண் இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் கலசப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.