Published:Updated:

பணம் கேட்டதற்கு எஸ்.ஐ எனக் கூறி அடாவடி! -போலி ஐ.டி கார்டுகளுடன் சிக்கிய ஆசாமி

போலி போலீஸ் அடையாள அட்டை
போலி போலீஸ் அடையாள அட்டை

காவல்துறையில் வயர்லெஸ் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிவதாக ஓர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றோர் அடையாள அட்டையில் அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பனவிளையைச் சேர்ந்த ராஜன் (39) என்பவர் குளச்சல் வி.கே.பி ஸ்கூல் அருகில் பெயின்டிங் வொர்க் ஷாப் நடத்திவருகிறார். இவரது வொர்க் ஷாப்பில் டிப் டாப் ஆகச் சென்ற ஒருவர், கார் டயர் டிஸ்க் ரிப்பேரைச் சரிசெய்திருக்கிறார். சரி செய்த பிறகு வொர்க் ஷாப் ஊழியர் அதற்கான கூலியை கேட்டபோது அவர் குளச்சல் டி.எஸ்.பி அலுவலகத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ-ஆக இருப்பதாகக் கூறியதுடன், பணம் கொடுக்க மாட்டேன் என அடாவடி செய்திருக்கிறார்.

இதனால் அவர்மீது சந்தேகமடைந்த வொர்க் ஷாப் ஊழியர்கள் அதுபற்றி உரிமையாளர் ராஜனுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே வொர்க் ஷாப்புக்கு விரைந்து சென்ற ராஜன், அங்கிருந்த அந்த டிப்டாப் ஆசாமியைப் பார்த்தார். அவர் ஏற்கெனவே இதுபோல இரண்டு முறை டயர் டிஸ்க்கைச் சரிசெய்துவிட்டு போலீஸ் எனக் கூறி பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார் என ராஜன் கூறினார். உடனே வொர்க்‌ ஷாப் ஊழியர்கள் அவரைப் பிடித்து குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலி அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்ட சேகர்
போலி அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்ட சேகர்

குளச்சல் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த டிப் டாப் ஆசாமி மண்டைக்காடு அருகே காட்டுவிளையைச் சேர்ந்த சேகர் (52) என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையில் ஏட்டாக வேலை பார்த்திருக்கிறார். அப்போது துறைரீதியான நடவடிக்கையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் விசாரணையில் தெரிந்துகொண்ட போலீஸார், அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!

அவர் காவல்துறையில் வயர்லெஸ் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிவதாக ஓர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றோர் அடையாள அட்டையில் அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகர்கோவில் மண்டலத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணி செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இரண்டு அடையாள அட்டைகளும் போலியானவை என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

போலி போக்குவரத்துக் கழக அடையாள அட்டை
போலி போக்குவரத்துக் கழக அடையாள அட்டை

இதையடுத்து வொர்க்‌ ஷாப் உரிமையாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சேகர் மீது ஆள் மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் (இந்திய தண்டனை சட்டப்பிரிவு 419, 420) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர் இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிவதாகக் கூறி பணம் கொடுக்காமல் வொர்க் ஷாப்பில் கார் சரிசெய்த ஆசாமியின் செயலால் குளச்சலில் பரபரப்பு ஏற்பட்டது.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...
அடுத்த கட்டுரைக்கு