Published:Updated:

`பணத்தை எண்ணிக்கூட பார்க்கல; போலீஸ் வரும்னு தெரியும்!’ -பழக்கடை கொள்ளையில் சிக்கிய `அப்பாவி’ திருடன்

பழக்கடையில் கொள்ளையடித்த முத்துசாமி
பழக்கடையில் கொள்ளையடித்த முத்துசாமி

திருடன், தலையில் பாலித்தீன் கவர் அணிந்து, முகத்தை மறைத்த நிலையில் மேசையைக் கம்பியால் நெம்பி உடைத்து, பணத்தை எடுத்து அங்கிருந்த ஒரு துணியில் கட்டியிருக்கிறார்.

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், வெளி மாவட்டங்களில் இருந்து பழங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, குமரி மாவட்டத்தில் விற்பனை செய்து வருகிறார். நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே இவருக்கு சொந்தமான பழக்கடையில் உள்ள ஆபீஸ் ரூமில், நேற்று முன்தினம் இரவு, 23 லட்சம் ரூபாய் வைத்து ஷட்டரைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆப்பீஸ் ரூமில் மேசை திறக்கப்பட்டு அதிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள ஆறு லட்ச ரூபாய் அங்கு சிதறிக் கிடந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸார் அங்கு சென்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது, தலையில் பாலித்தீன் கவர் அணிந்து, முகத்தை மறைத்த நிலையில் ஒருவர் மேசையைக் கம்பியால் நெம்பி உடைத்து, பணத்தை எடுத்து அங்கிருந்த ஒரு துணியில் கட்டியிருக்கிறார். பணக்கட்டுகள் அதில் கொள்ளாததால், அங்கிருந்த ஒரு பையை எடுத்து பணத்தை அடுக்கியுள்ளார். அதிலும் பணம் கொள்ளாததால் மீதமுள்ள பணத்தை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் ஆறு லட்ச ரூபாய் தப்பியது.க்

மீட்கப்பட்ட பணத்தை பார்வையிடும் ஏஎஸ்பி ஜவஹர்
மீட்கப்பட்ட பணத்தை பார்வையிடும் ஏஎஸ்பி ஜவஹர்

இந்த கொள்ளைகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவானவரின் புகைப்படத்தை வைத்து நாகர்கோவில் ஏஎஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது புகைப்படத்தில் இருந்த நபர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுவாங்கி, ரோட்டோர கடையில் வைத்து குடித்துக்கொண்டிருந்ததை அடையாளம் கண்டுகொண்ட போலீஸார், ஜீப்பில் ஏற்றி வடசேரி காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

`திருடன் பையில் கொள்ளாத பணம்; சிதறிய லட்சங்கள்!’ -நாகர்கோவில் பழக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

விசாரணையில், அவர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்ற கோபால் (67) எனத் தெரியவந்தது. இவர், நாகர்கோவில் சந்தைப் பகுதிகளில் மூட்டை தூக்குதல், உணவு தானியக் கடைகளில் சிறுசிறு உதவி செய்தல் போன்ற வேலைகளைச் செய்துவந்துள்ளார். இரவு நேரங்களில் கடைகளின் பூட்டை உடைத்து சிறு பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து, அதைக் கொண்டு மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நாகராஜா கோயில் தெருவில் சுற்றித்திரிந்துள்ளார். நேற்று இரவு பழக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்ட பணம்
மீட்கப்பட்ட பணம்

முத்துசாமி போலீஸாரிடம், "மது குடிப்பதற்காக இதுவரை சிறிய தொகையைத் திருடிவந்தேன். பழக்கடையில் அதிக பணத்தைக் கொள்ளையடித்ததால் அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் எத்தனை ரூபாய் இருக்கிறது என எண்ணிப்பார்க்கவும் இல்லை. போலீஸ் வரும் என்பது எனக்குத் தெரியும். அதனால் வெட்டூர்ணிமடம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துக்கொண்டு கையில் பணப்பையுடன் இருந்தேன். போலீஸார் அங்குவந்து என்னை அழைத்ததும் நான் அவர்களுடன் வந்துவிட்டேன்" என்றார் அப்பாவியாக. அவரிடம் இருந்து போலீஸார் 17 லட்சம் ரூபாயை மீட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு