கரூர் மாவட்ட வன அலுவலருக்கு, வன விலங்குகளை மர்ம நபர் வேட்டையாடி எடுத்துச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கரூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட செம்மடை, வாங்கல், கட்டளை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் சந்தேகத்துக்கிடமான நபர்களை மறித்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாங்கப்பாளையம் - வாங்கல் சாலையில் செல்லும்போது, அருகம்பாளையம் அருகில் வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், கையில் துப்பாக்கியுடன் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டபோது, அவரிடம் வேட்டையாடப்பட்ட வன விலங்குகள் இருப்பது தெரியவந்தது, அந்த நபரை வனத்துறையினர் பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களின் விசாரணையில் அந்த நபர், அரசு காலனியை அடுத்த நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த திருப்பூர் சிங் என்பது தெரிய வந்தது, அவரிடமிருந்த சட்டத்துக்கு விரோதமாக வேட்டையாடி வைத்திருந்த, ஒரு மரநாய், 2 காட்டுப்பூனைகள், 3 முயல்கள், 2 கௌதாரி ஆகிய வன விலங்குகளை கைப்பற்றினர். மேலும், அவர் அந்த வன உயிரினங்களை வேட்டையாடப் பயன்படுத்திய துப்பாக்கி, செல்போன், வேட்டைக்குப் பயன்படுத்தும் ஹெட் லைட் உள்ளிட்ட பொருள்களையும் வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதோடு, அவரைக் கைதுசெய்த வனத்துறையினர், தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.