Published:Updated:

கோவில்பட்டி: 90 திருட்டுச் சம்பவங்கள்; கைரேகையைால் பிடிபட்ட கொள்ளையன்; 64 பவுன் தங்க நகை மீட்பு!

மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

கோவில்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டாக வீடு புகுந்து நகைத் திருட்டில் ஈடுபட்டவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு நாலாட்டின்புதூர், கழுகுமலை காவல் நிலைய பகுதியில் ஆறு வீடுகளில் தங்க நகை, பணம், வழிப்பறி, நான்கு இடங்களில் பைக் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் வாகனத் திருட்டு, வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ரவி
கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ரவி
திசையன்விளை: ‘நைட்டி அணிந்து 5  கடைகளில் திருடிய திருடன்' - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

அத்துடன் திருட்டு நடந்த இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளைவைத்து, மற்ற மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில், தென்காசி மாவட்டம், மரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் என்பவரின் கைரேகையுடன் அது ஒத்துப்போனது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ரவி என்ற கார்த்திக்கை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார். அவர் திருடிய நகை, பணம், இரு சக்கர வாகனங்கள் பதுக்கியிருந்த இடத்தை அறிந்து போலீஸார் அவற்றை மீட்டனர். இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், 4 பைக்குகள் ஆகியவை மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட ரவி
கைதுசெய்யப்பட்ட ரவி

இவர், கோவில்பட்டி மேற்குக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நான்கு வீடுகளில் புகுந்து தங்க நகைகள், பணம் திருடியது, வழிப்பறி செய்த வழக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடியது என ஏழு வழக்குகளிலும், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய வழக்கிலும், நாலாட்டின்புதூர் காவல் நிலையப் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியது, ஒரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு என இரண்டு வழக்குகளிலும் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்மீது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல் நிலையத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கு இருக்கிறது என்பதும், 90 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ``கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சபாபதி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் மாதவராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

குற்றவாளியைக் கைதுசெய்த தனிப்படையினர்
குற்றவாளியைக் கைதுசெய்த தனிப்படையினர்

கடந்த 15 நாள்களாகத் தீவிர விசாரணை நடத்திவந்தனர். கைரேகை, சிசிடிவி காட்சி உள்ளிட்டவற்றை வைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர். இந்தநிலையில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ரவி என்ற கார்த்திக் என்பவரை தனிப் படையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள், ‌ரூ.2 லட்சம் பணம், நான்கு பைக்குகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு