திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவரின் மனைவி அஞ்சுகம். இவர்களுக்கு இரட்டையர்களாக 17 வயதில் இரு மகள்கள், 15 வயதில் ஒருவர் என மொத்தம் மூன்று மகள்கள் இருக்கிறாகள். எஸ்.கே.நகரில் வசித்துவரும் தனது தங்கை கணவரான கேஷ்டி ராஜா என்பவரிடம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 2.5 லட்சம் ரூபாயை வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார் ரகு. கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு போன்ற காரணங்களால் ரகுவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. வட்டிப் பணம் கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறார்.

மொத்தப் பணத்தையும் வட்டியும் முதலுமாகக் கேட்டு கேஷ்டி ராஜா பிரச்னை செய்திருக்கிறார். இதனால், வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் விற்று 40,000 ரூபாயைத் திரட்டி கேஷ்டி ராஜாவிடம் கொடுத்திருக்கிறார் ரகு. மீதிப் பணத்தை சில மாதங்களில் கொடுத்துவிடுவதாகக் கால அவகாசமும் கேட்டிருக்கிறார். ரகு கேட்டிருந்த அவகாச நாள்களும் முடிந்துவிட்டதால் ஆத்திரமடைந்த கேஷ்டி ராஜா, பணம் கேட்டு நச்சரித்துவந்திருக்கிறார். இதனால், மன வேதனையடைந்த ரகு கடனுக்கு பதில் தனது வீட்டை தந்துவிடுவதாகக் கூறியதாகச் சொல்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டால் மனைவி, மூன்று மகள்களுடன் வீதியில்தான் நிற்க வேண்டும் என்ற கவலையும் ரகுவை வாட்டி வதைத்திருக்கிறது. எப்படியாவது கடனை அடைத்துவிட வேண்டும் என்பதற்காக, பலரை அணுகியிருக்கிறார் ரகு. அவ்வளவு பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. நேற்று தனது மனைவியுடன் வேலைக்குச் சென்றுவிட்ட ரகுவின் வீட்டுக்கு வந்த கேஷ்டி ராஜா அங்கிருந்த அவரின் மகள்களிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ரகுவின் மூன்று மகள்களையும் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்து கதவை வெளியில் பூட்டியிருக்கிறார் கேஷ்டி ராஜா. பக்கத்து வீட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் அந்த நேரத்தில் ரகுவின் மகள்களுடன் இருந்ததால் வீட்டுக்குள்ளேயே அவரும் சிறைவைக்கப்பட்டார். தகவலறிந்து வந்த ரகுவும், அவரின் மனைவியும் கேஷ்டி ராஜாவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களையும் ஆபாசமாகப் பேசி மிரட்டியிருக்கிறார் கேஷ்டி ராஜா. இது குறித்து, ஆரணி காவல் நிலையத்தில் ரகு புகாரளிக்க... அவரின் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீஸார் பூட்டைத் திறந்துவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கேஷ்டி ராஜாவைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்துள்ளனர்.