Published:Updated:

உ.பி: `போலீஸுக்கு புலிஷ்...’ வார்த்தைப் பிழை எஸ்.எம்.எஸ்! - சிக்கவைத்த காவல்துறை

சிறை
சிறை

தானாவில் 10 பேரை வரிசைப்படுத்திய போலீஸார், அவர்களுக்கு போலீஸ் மற்றும் சீதாப்பூர் ஆகிய இரு சொற்கள் கொண்ட ஒரு வாக்கியத்தை எழுதும்படி கட்டளையிட்டனர். இதில் சாண்டிலாவைச் சேர்ந்த 22 வயதான ராம் பிரதாப் சிங் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தில் 8 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில், குழந்தையைக் கடத்திவைத்திருந்த நபர், அந்தக் குழந்தையின் தந்தைக்கு ரூபாய் 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியிருக்கிறார். அந்த எஸ்.எம்.எஸ்-ல் `போலீஸ்’ என்ற வார்த்தையை `புலிஷ்’ என்றும், `சீதாப்பூர்’ என்ற வார்த்தையை `சிதா-புர்’ என்றும் பிழையோடு அனுப்பியிருக்கிறார். குறுஞ்செய்தியை அடிப்படையாகக்கொண்டு பத்து பேரை வாக்கியம் ஒன்றை எழுதச்சொன்ன காவல்துறை அதிகாரிகள் கொலையாளியைக் கண்டுபிடித்து சிறையிலடைத்தனர்.

எஸ்.எம்.எஸ்
எஸ்.எம்.எஸ்

8 வயது சிறுவன் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வழக்கு குறித்துத் தெரிவித்த ஹர்டோய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் வட்ஸ் (Anurag Vats), ``கடந்த நவம்பர் 4-ம் தேதி பெனிகஞ்ச் (Beniganj) காவல் நிலையத்தில், 8 வயது சிறுவன் தனது பாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது காணாமல்போய்விட்டான். அக்டோபர் 26 முதல் இன்று வரை அந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறுவனின் பெற்றோர்கள் புகாரளித்தனர். நவம்பர் 4 -ம் தேதி இரவு, 11:30 மணியளவில், சிறுவனின் தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வந்தது.

அந்தச் குறுஞ்செய்தியில், ``குழந்தையை உயிருடன் மீட்டு அழைத்துச் செல்ல ரூபாய் 2 லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வாருங்கள். போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டாம். தெரியப்படுத்தினால் உங்கள் மகன் கொல்லப்படுவான்’’ (Do lakh rupay Seeta-Pur lekar pahuchiye. Pulish ko nahi batana nahi to haatya kar denge) என்று வந்த எஸ்.எம்.எஸ்-ல் `போலீஸ்’ (Police) என்ற வார்த்தை `புலிஷ்’ (Pulish) என்றும், `சீதாப்பூர்’ என்ற வார்த்தை `சிதா-புர்’ (Seeta-pur) என்றும் தவறாக வார்த்தைப் பிழையோடு இருந்ததை கவனித்தோம்.

உடனடியாக, கடத்தப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க குழுக்களை உருவாக்கியதோடு, குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தோம். ஆனால், அந்த எண் உபயோகத்தில் இல்லை. சைபர் கண்காணிப்புக் குழுவின் உதவியோடு மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி, கல்வியறிவற்றவராகவும் எஸ்.எம்.எஸ் எழுதத் தெரியாத நபர் என்பதும் தெரியவந்தது. பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 பேரை சந்தேகித்து அவர்களை அழைத்து வந்தோம்" என்றார் ஹர்டோய் எஸ்.பி அனுராக்.

சிறை
சிறை

சந்தேகத்தின் பெயரில் அழைத்து வரப்பட்ட பத்து நபர்களையும், `` `எனக்கு போலீஸ் வேலை வேண்டும். என்னால் ஹர்டோயிலிருந்து சீதாப்பூர் வரை ஓட முடியும்’ (Main police main bharti hona chahta hun” and “Main Hardoi se Sitapur daud kar ja sakta hun) என்ற வாக்கியத்தை எழுதத் சொல்லியிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அப்போது, குழந்தையின் தூரத்து உறவினரான சாண்டிலாவைச் சேர்ந்த ராம் பிரதாப் சிங், குழந்தையின் தந்தைக்கு வந்த குறுஞ்செய்தி (SMS)-ல் பிழையோடு இருந்ததைப்போலவே, இரண்டு தவறான வார்த்தைகளை மீண்டும் `புலிஷ்’ என்றும் `சிதா-புர்’ என்றும் எழுதியிருக்கிறார்.

இதன் அடிப்படையில், அந்த எஸ்.எம்.எஸ்-ஸை அனுப்பியது ராம் பிரதாப் சிங் என ஊர்ஜிதப்படுத்திய காவல்துறையினர் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு