Published:Updated:

`நான் பூஜை செய்தால் வருமானம் பெருகும்!' -சேலம் மந்திரவாதியால் நாமக்கல் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கு வந்து பரிகார பூஜை செய்வதாகவும் அதனால் வீட்டில் வருமானம் பெருகும் என்று கூறி அடிக்கடி வசந்தாவிடம் போனில் பேசியுள்ளார்.

மந்திரவாதி ராமச்சந்திரன்
மந்திரவாதி ராமச்சந்திரன்

குடும்பக் கஷ்டத்துக்காகப் பரிகாரம் செய்ய வந்த குடும்பத்துக்கு மந்திரவாதி ஒருவர் கொடுத்த தொல்லையால், குடும்பத் தலைவரை இழந்து தவிக்கிறது நாமக்கல் குடும்பம் ஒன்று.

Representational Image
Representational Image

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர் கட்டடங்களுக்குச் சென்ட்ரிங் வேலை செய்து கொடுத்து வந்தார். இவருடைய மனைவி வசந்தா (45). இவர் நாச்சிப்பட்டியில் பியூட்டி பார்லர் மற்றும் தையல் கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர்களுக்கு 21 வயதில் மகனும், 20 வயதில் மகளும் உள்ளனர்.

குடும்பச் சூழல் காரணமாக இவர்கள் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள மந்திரவாதி ராமச்சந்திரன் என்கிற ராம்ஜெத்மலானியை சந்தித்துள்ளனர். அவரிடம், தங்களின் குடும்பக் கஷ்டங்களைக் கூறியுள்ளனர். `மாந்திரீகம் மற்றும் பரிகாரம் செய்தால் குடும்ப கஷ்டம் நீங்கும்' என்றுகூறி வசந்தாவிடம் இருந்து போன் நம்பரை வாங்கிக்கொண்டார் ராமச்சந்திரன்.

வீட்டுக்கு வந்து பரிகார பூஜை செய்வதாகவும் அதனால் வீட்டில் வருமானம் பெருகும் என்று கூறி அடிக்கடி வசந்தாவிடம் போனில் பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, வசந்தாவுடன் நட்பைப் பலப்படுத்தி வந்துள்ளார். இந்தத் தகவல் வசந்தாவின் கணவர் கிருஷ்ணனுக்குத் தெரியவரவே, தன் மனைவியைக் கண்டித்ததோடு மந்திரவாதி உடனான தொடர்பைக் கைவிடுமாறு எச்சரிக்கை செய்துள்ளார்.

கொலையான கிருஷ்ணன்
கொலையான கிருஷ்ணன்

இத்தகவலை மந்திரவாதி ராமச்சந்திரனுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் வசந்தா. இதையடுத்து, கடந்த 31-ம் தேதி இரவு கிருஷ்ணன் வீட்டுக்குக் குடிபோதையில் வந்து தகராறு செய்திருக்கிறார். வசந்தாவின் மகனுடனும் சண்டை போட்டுவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணனின் வயிற்றில் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் மந்திரவாதி ராமச்சந்திரனை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.

காவல்துறையிடம் ராமச்சந்திரன் கொடுத்த தகவலில், '' நான் மாந்த்ரீகம் கற்றிருக்கிறேன். என்னிடம் வசந்தா குடும்பத்தினர் குடும்ப கஷ்டத்துக்காக வந்தார்கள். அப்போது எனக்கும் வசந்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அடிக்கடி வெண்ணந்தூருக்கு கிருஷ்ணன் இல்லாதபோது அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.

ஒரு கட்டத்தில் அவருடைய மகளையும் என் பக்கம் கொண்டுவர முயன்றேன். இதை வசந்தாவிடம் சொன்னேன். அன்றிலிருந்து அவர் என்னிடம் பேசவில்லை. இதைப் பற்றி விசாரிக்கத்தான் அன்று போனேன். அங்கு கிருஷ்ணனும் அவருடைய மகனும் என்னைத் தாக்கினார்கள். இதனால் ஆத்திரத்தில் கிருஷ்ணனைக் கத்தியால் குத்திவிட்டேன்'' எனக் கூறியிருக்கிறார்.