Published:Updated:

கோயில் முதல் வீடுவரை பதிவான சிசிடிவி காட்சிகள்! - `வெள்ளிவிழா’ திருட்டில் சிக்கிய கொள்ளையன்

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி கைதுசெய்த போலீஸார் கொள்ளையடித்த பொருள்களையும் அள்ளிக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில், வீடுகளைக் குறிவைத்து சிலர் கொள்ளைகளை அரங்கேற்றிவந்தனர். தங்க நகைகள், கோயிலிலுள்ள குத்துவிளக்குகள், வெண்கலத்தாலான கோயில் பூஜைப் பொருள்கள் அதிக அளவில் கொள்ளை போயின. இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தனிப்படையின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிவந்தது அந்தக் கும்பல். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் குத்துவிளக்கு, பூஜைப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

நகைக் கடை உரிமையாளர் மீது மிளகாய்பொடி தூவிய பெண்! - கொள்ளை முயற்சியில் சிக்கிய கணவன், மனைவி

போலீஸார் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர்கள்கொண்ட கும்பல், கோயிலில் கொள்ளையடித்துவிட்டு திரும்பிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் குளச்சல் பிரதான சாலையில் முக்கியச் சந்திப்பு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்தக் கும்பல் சாலையில் பயணித்து, இறுதியில் சடையால்புதூர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் செல்வது வரை சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தன.

கைதுசெய்யப்பட்ட அனிஷ்ராஜன்
கைதுசெய்யப்பட்ட அனிஷ்ராஜன்

அந்த வீட்டைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட குத்துவிளக்குகள், பூஜைப் பொருள்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டிருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி, கைதுசெய்த போலீஸார் கொள்ளையடித்த பொருள்களையும் அள்ளிக்கொண்டு இரணியல் காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

தூத்துக்குடி: `தெரு நாய்களுக்கு பிஸ்கட்; ஜன்னல் வழியே திருட்டு'- நள்ளிரவில் தொடரும் சம்பவம்!

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அனிஷ்ராஜன் (33) என்பதும், வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொழில்பயிற்சி படித்து முடித்துவிட்டு பிளம்பராக வேலை பார்த்துவந்த அனிஷ்ராஜனுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. குழந்தை இல்லாத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நண்பர்களுடன் சேர்ந்து பூட்டிய கோயில், வீடுகளைக் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார். கொள்ளைபோன பொருள்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் ஜாலியாக செலவு செய்திருக்கிறார்.

கொள்ளை குறித்து விவரிக்கும் எஸ்.பி பத்ரி நாராயணன்
கொள்ளை குறித்து விவரிக்கும் எஸ்.பி பத்ரி நாராயணன்

ஏற்கெனவே கோயில், வீடுகள் எனச் சுமார் 24 இடங்களில் கொள்ளையடித்தும் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருந்த அனிஷ்ராஜன் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள கோயிலில் தனது 25-வது, அதாவது வெள்ளிவிழா திருட்டை அரங்கேற்றியிருக்கிறார். திருடிவிட்டுச் திரும்பிச் செல்லும்போது வீடுகள், கடைகளில் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானதால் சிக்கிக்கொண்டார் அனிஷ்ராஜன். அவரிடமிருந்து 600-கிலோ எடையுள்ள வெண்கலப் பொருள்கள், தங்க நகைகள், டி.வி உள்ளிட்ட கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 8,60,000 ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் மூன்றுபேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு