Published:Updated:

`கஞ்சா போதை; அடுத்தடுத்து 3 கொலைகள்!' -சேலம் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த டாப் ஸ்டூடன்ட்

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

கூலித் தொழில் செய்யும் பெற்றோர்களால் ஆண்டிச்சாமியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லை. இதனால், தவறான நண்பர்களின் சேர்க்கையால் கஞ்சா அடிக்கக் கற்றுக்கொண்டார்.

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸில் கடந்த 2-ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டார். இதே பாணியில் கடந்த 3-ம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையம் மாநகராட்சி வணிக வளாகத்தில் 60 வயதுடைய பழ வியாபாரி அங்கமுத்து, 4-ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நிழற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்கப் பெரியசாமி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆண்டிச்சாமி
ஆண்டிச்சாமி

இதையடுத்து, சேலம் மாநகர கமிஷனர் செந்தில்குமார் 3 தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீஸார் கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு, முதியவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

சி.சி.டி.வி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்திக் கைது செய்தனர்.

`தேனியில் கெடுபிடி; ஆந்திராவில் சாகுபடி!' - கஞ்சா நெட்வொர்க் கும்பலால் மிரளும் தமிழக போலீஸ்

கைதான நபர் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``அந்த நபரின் பெயர் ஆண்டிச்சாமி. வயது 21. இவர் திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்த மார்க்கண்டன், நாகம்மாள் தம்பதியரின் மூத்த மகன். அரசுப் பள்ளியில் படித்துள்ள ஆண்டிச்சாமி, 10-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு 428 மதிப்பெண்ணைப் பெற்றுச் சிறந்த மாணவனாக இருந்துள்ளார்.

கொலையான முதியவர்
கொலையான முதியவர்

கூலித் தொழில் செய்யும் பெற்றோர்களால் ஆண்டிச்சாமியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லை. இதனால், தவறான நண்பர்களின் சேர்க்கையால் கஞ்சா அடிக்கக் கற்றுக் கொண்டார். பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்காமல் கஞ்சா அடித்துவிட்டு அவர்களிடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததால் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள்.

முதன்முதலில் கஞ்சா அடித்துவிட்டு வேளாங்கண்ணியில் ஒரு முதியவரைக் கொன்றிருக்கிறார். அதையடுத்து சேலத்துக்கு வந்து தொடர்ந்து 3 கொலைகளைச் செய்துள்ளார். கஞ்சா போட்டுவிட்டால் தூங்கிக் கொண்டிருப்பவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற கொடூர எண்ணம் வருவதாகவும் பிறகு கொலை செய்துவிட்டு அவர்களுடைய பாக்கெட்டில் பணம் எடுத்ததாகவும் தெரிவித்தார்'' என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு