Published:Updated:

`பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சா... அதான் அடிச்சேன்!’ - வேலூர் பேருந்து நிலையத்தைப் பதறவைத்த போதை நபர்

வேலூர் புதிய பேருந்து நிலையம்
வேலூர் புதிய பேருந்து நிலையம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில், அடுத்தவர் மனைவியை உரிமை கொண்டாடிய போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக பேருந்து மூலம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தார். மருத்துவமனை வழித் தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக நடந்து சென்ற அந்தப் பெண்ணை, மது போதையில் தள்ளாடியபடி எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென மறித்து கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம்
வேலூர் புதிய பேருந்து நிலையம்

அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், `யார் நீ... எதுக்கு அடிக்கிற...’ என்று கேட்க, `என்னைப் பார்த்தே யாருன்னு கேட்கிறீயா...’ என்று கையை மடக்கி மேலும் தாக்கத் தொடங்கியிருக்கிறார் மது போதையில் இருந்த அந்த நபர். அங்கிருந்த பயணிகள் சிலர், தாக்குதலைத் தடுக்க முன் வந்தனர்.

ஆத்திரமடைந்த போதை நபர், `என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன், நீங்க யாருடா கேட்க...’ என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பதறிப் போன அந்தப் பெண், `நான் இந்த ஆள் பொண்டாட்டியே இல்ல... யாராவது காப்பாத்துங்க’ என்று கதறியிருக்கிறார். போதை நபர், மனைவி என்று கூறி அந்தப் பெண்ணை உரிமை கொண்டாடினார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம்
வேலூர் புதிய பேருந்து நிலையம்

கூட்டம் சேர்ந்ததையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அங்கு வந்தனர். அந்தப் பெண், `இவன் யாருனே தெரியல சார்... நான் வாணியம்பாடியிலிருந்து வர்றேன். திடீரென அடிக்கிறான்’ என்றார். போதையைத் தெளிய வைத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

வேலூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (40) என்பதும் அந்தப் பெண் இவரின் மனைவியில்லை என்பதும் விசாரித்தபோது தெரியவந்தது. `பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சது... அதான் அடிச்சிட்டேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவ முயன்ற சின்னராஜை, போலீஸார் நையப்புடைத்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் வாடிய முகத்துடன் மருத்துவமனைக்குச் சென்றார். இந்தச் சம்பவத்தால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

வேலூர் வடக்கு காவல் நிலையம்
வேலூர் வடக்கு காவல் நிலையம்

``வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வழிப்பறி மற்றும் போதை நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பயணிகளின் உயிருக்கும் பொருள்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு