Published:Updated:

திருவாரூர்: அரசியல் பிரமுகர் படுகொலை! - வதந்தியால் டூ-விலர் மெக்கானிக்குக்கு நேர்ந்த கொடூரம்

படுகொலை செய்யப்பட்ட ரஜினி பாண்டியன்
படுகொலை செய்யப்பட்ட ரஜினி பாண்டியன்

ஒரு சிலரின் தவறான புரிதலால் பரவிய, வதந்தியால், இந்த சம்பவத்திற்கு எந்தவிதத்திலும் துளியும் சம்பந்தம் இல்லாத, ஒரு அப்பாவி நபர் பாதிக்கப்பட்டது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள ஆரியூரைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன். `வளரும் தமிழகம்’ என்ற கட்சியின் மாவட்ட செயலாளரான இவர், நேற்று இரவு, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால், பயரங்கர ஆயுதங்களால், தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டார்கள். இதனிடையே, வதந்தியால், இந்த சம்பவத்திற்கு எந்தவிதத்திலும் துளியும் சம்பந்தம் இல்லாத, ஒரு நபர் பாதிக்கப்பட்டது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ரஜினி பாண்டியன்
படுகொலை செய்யப்பட்ட ரஜினி பாண்டியன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் உள்ள ஆரியூரில் வசித்து வந்தவர் ரஜினி பாண்டியன். இவர், ஜான் பாண்டியன் தலைமையில் இயங்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்து, பிறகு, இதே பகுதியைச் சேர்ந்த பாலை பட்டாபிராம் என்பவர் புதிதாக தொடங்கிய, வளரும் தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ரஜினி பாண்டியனை, வடசங்கேந்தி என்னுமிடத்தில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், வழி மறித்து பயங்கர ஆயுதங்களால், தாக்கிவிட்டு, தப்பியோடினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஜினி பாண்டியனை அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஜினி பாண்டியன் உயிரிழந்தார்.

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

இவரின் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். படுகொலை செய்யப்பட்ட ரஜினி பாண்டியனின் சொந்த ஊரான ஆரியூரிலும், இவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையிலும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டார்கள்.

திருவாரூர்: அரசியல் பிரமுகர் படுகொலை! - வதந்தியால் டூ-விலர் மெக்கானிக்குக்கு நேர்ந்த கொடூரம்

இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், ’’ரஜினி பாண்டியனுக்கும், இப்பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் எதிரொலியாக, தற்போது ரஜினி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம். இவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்றும் விசாரித்து வருகிறோம் ”என தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் எடையூர் சங்கேந்தியை சேர்ந்த மகாதேவன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே, ரஜினி பாண்டியனின் உடல், பிரதேச பரிசோதனைக்காக, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் இப்பகுதியில் கூடியிருந்தார்கள். இந்த மருத்துவமனைக்கு எதிரில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வரும் வீரக்குமார், தொலைபேசியில் யாரிடமோ யதேச்சையாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். ரஜினி பாண்டியனை கொலை செய்த குற்றவாளிகளிடம்தான் வீரக்குமார் பேசிக்கொண்டிருப்பதாக, ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள் மத்தியில் வதந்தி பரவியதாக தெரிகிறது.

இந்த வதந்தியால் ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள், வீரகுமாரை கொடூரமாக தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்த டூ வீலர் மெக்கானிக் வீரகுமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ``ரஜினி பாண்டியன் படுகொலை சம்பவத்திற்கும் வீரக்குமாருக்கும் துளியும் சம்பந்தமில்லை. தவறான புரிதலால் ஏற்பட்ட வதந்தியால், வீரக்குமார் தாக்கப்பட்டதாக” காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு