Published:Updated:

பல பெண்களுடன் நெருக்கம் - திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் காவலர்களிடம் அழைத்துவந்த பெண் வீட்டார்

`மொபைல்போனில் தியாகராஜன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ இருக்கிறது. அதை ஆய்வு செய்து அவனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு தியாகராஜனையும் எச்சரித்து எங்க பெண்ணுடன் வாழவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கும்பகோணம் துக்காம்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர் தியாகராஜன். இவர் பல இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஏமாற்றி, பாலியல்ரீதியான தொந்தரவுகளைச் செய்து உல்லாசமாக இருந்துவந்திருக்கிறாராம். பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ் எல்லாம் தியாகராஜனின் செல்போனில் இருந்திருக்கின்றன.

இளம்பெண்களுடன் தொடர்பிலிருந்த தியாகராஜன்
இளம்பெண்களுடன் தொடர்பிலிருந்த தியாகராஜன்

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய தாய் இறந்தவிடவே, தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். இதனால் தன்னுடைய அத்தை, மாமா வீட்டில் வளர்ந்துவந்த மாலதி கும்பகோணத்திலுள்ள பந்தல் கான்ட்ராக்டரின் கடையில் வேலை பார்த்துவந்திருக்கிறார்.

மாலதி வேலை பார்த்த கடைக்கு தியாகராஜன் அடிக்கடி சென்று வர, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. கடந்த நான்கு வருடங்களாக இருவரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாலதியை உயிருக்கு உயிராக காதலிப்பதாகக் கூறி, ஏமாற்றி பல முறை நெருக்கமாக இருந்து வந்திருக்கிறாராம் தியாகராஜன்.

இதைத் தொடர்ந்து சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறிச் சென்ற தியாகராஜன், அடிக்கடி வந்து மாலதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதேபோல் கடந்த முறை தியாகராஜன் வந்தபோது அவரின் செல்போனை யதேச்சையாக எடுத்துப் பார்த்திருக்கிறார் மாலதி. அதில் தியாகராஜன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் போட்டோ, வீடியோ ஆகியவை இருந்துள்ளன. அதேபோல் பல பெண்களின் வாட்ஸ்அப்புக்கு தியாகராஜன் அனுப்பியிருக்கும் ஆபாச மெசேஜ்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

தியாகராஜன்
தியாகராஜன்

அப்போதுதான் காதலிப்பதாகக் கூறி, தன்னைப்போலவே பல பெண்களை தியாகராஜன் ஏமாற்றியது தெரியவந்து வெடித்துக் கதறியிருக்கிறார். இது குறித்து தியாகராஜனிடம் கேட்டதற்கு, `ஒழுங்கா இரு... இல்லைன்னா... நீ என்னோட ஒண்ணா இருந்த வீடியோவை வெளியேவிட்டுடுவேன்” என மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டார். காதல் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து தவித்த மாலதி, தன்னைப்போல் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என விம்மியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி தியாகராஜனிடம் முறையிட்டிருக்கிறார் மாலதி. ஆனால் மாலதியைச் சந்திப்பதையே தவிர்த்து வந்திருக்கிறார். தியாகராஜனுடன் தான் ஒன்றாக இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறியதால், இதை உறவினர்கள் யாரிடமும் கூறாமல் பயந்துகொண்டு இருந்திருக்கிறார் மாலதி.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் நேற்று மாலை மாலதியின் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு தியாகராஜன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம் சமாதானம் செய்வதுபோல் நடித்து, பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அழுது புலம்பியிருக்கிறார் மாலதி. இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மாலதியின் அத்தை, இதைப் பார்த்துவிட, மாலதியிடம், நடந்தவற்றைக் கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து தன்னைக் காதலிப்பதாக ஏமாற்றி, தன்னிடம் தவறாக நடந்துகொண்டதையும், தற்போது பல பெண்களுடன் பழக்கம் வைத்துக்கொண்டு தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதையும் தன் அத்தையிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார் மாலதி. இதையடுத்து தப்பி ஓட முயன்ற தியாகராஜனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தியாகராஜன்
தியாகராஜன்

பின்னர் மாலதியின் உறவினர்கள் அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாலதிக்கும் தியாகராஜனுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். உடனடியாக தியாகராஜனுக்கு பட்டு வேட்டி, சட்டை உடுத்தவைத்ததுடன் மாலதிக்கும் மணமகளுக்கான அலங்காரம் செய்துவைத்தனர். பின்னர் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதுடன் தியாகராஜன், மாலதி கழுத்தில் தாலி கட்டினார்.

இதையடுத்து உறவினர்கள் புதுமணத் தம்பதியான இருவரையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ``தியாகராஜன் பல இளம்பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருக்கிறான். அவனது மொபைல்போனில் அவன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ இருக்கிறது. அதை ஆய்வு செய்து, அவனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, தியாகராஜனையும் எச்சரித்து எங்கள் பெண்ணுடன் ஒழுங்காக வாழ்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றனர்.

வேலூர்: காதல் தகராறில் இளைஞர் கொலை! - சடலத்தைப் புதருக்குள் புதைத்த நண்பர்கள் சிக்கியது எப்படி?

செல்போனில் இருந்த ஆபாச வீடியோ, போட்டோ, தன்னிடம் தொடர்பிலிருந்த பெண்கள் மொபைல்போனுக்கு ஆபாசமாக அனுப்பிய மெசேஜ் ஆகிவற்றைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்ததுடன், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகக் கூறி அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தரப்பில் கேட்டதற்கு புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு