Published:Updated:

`பெண் வீட்டினரைச் சமாளிக்க வைர நெக்லஸ்!' - திருட்டு வழக்கில் சிக்கிய புதுமாப்பிள்ளை வாக்குமூலம்

பெண் வீட்டினரை சமாளிக்கத்தான் வைர நெக்லஸ், தங்கச் செயின், டிவி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தேன் என்று திருமணம் முடிந்த 3வது நாளில் திருட்டு வழக்கில் சிக்கிய புதுமாப்பிள்ளை வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ
புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ

சென்னை பம்மலைச் சேர்ந்த டோரா ஐசக் கடந்த 8.9.2019-ம் தேதி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் தேவராஜ், இன்ஸ்பெக்டர்கள் பசுபதி, முகமது பரக்கத் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோவை கைது செய்தனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆரோக்கிய ஜான்போஸ்கோ, சென்னை அண்ணாசாலை, எல்.ஐ.சி பகுதியில் உள்ள 19 வயதாகும் பெண்ணை, கடந்த வாரம் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த 3 வது நாளில் ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ
ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ

போலீஸ் விசாரணையில் ஆரோக்கிய ஜான்போஸ்கோ அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி அருகே உள்ள கிராமம், ஊரில் கிடைத்த வேலைகளைச் செய்துவந்தேன். நண்பன் மூலம் சென்னைக்கு வேலைதேடி வந்தேன். போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஆடம்பரமாக வாழ கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டால் சில மாதங்களுக்குப் பிறகுதான் அடுத்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவேன்.

கொள்ளை வழக்கில் சிறைக்குச் சென்றபோது சிலர் எனக்கு நண்பர்களாகினர். ஆனால், தனியாகத்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவேன். என்னுடைய நண்பர் ஒருவர் எல்.ஐ.சி பகுதியில் குடியிருந்தார். அவரைச் சந்திக்க அங்கு செல்வேன். அப்போது அங்கு குடியிருந்த பெண் எனக்கு அறிமுகமாகினார். அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் நானும் காதலித்தோம்.

ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ
ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ

எனக்கு 33 வயதாகிவிட்டது. மேலும், நான் சிறைக்குச் சென்றதால் எனக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை. இதனால் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தேன். அந்தப் பெண்ணின் வீட்டினரிடம் பேசினேன். வரதட்சணையாகப் பணம், நகை வேண்டாம் என்று கூறினேன். அதோடு பெண் வீட்டினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொடுத்தேன். இதனால் என்னை வசதியான மாப்பிள்ளை என்று பெண் வீட்டினர் கருதினர்.

கொள்ளையடித்த பணத்தில் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தேன். என் காதலிக்கு மட்டும் என்னைப் பற்றிய உண்மைகள் கொஞ்சம் தெரியும். ஆனால், அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் என்ன வேலை செய்கிறேன் என்ற விவரம்கூடத் தெரியாது. அதுகுறித்து கேள்வி கேட்டால் அப்போதைக்கு ஏதாவது சொல்லி சமாளித்துவிடுவேன். திருமணத்துக்குப் பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.

representational image
representational image

அடிக்கடி பம்மல் பகுதிக்குச் செல்வேன். அப்போது, ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் டோரா ஐசக் என்பவரின் வீட்டை நோட்டமிட்டேன். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையில் சர்ச்சுக்குச் செல்வதைக் கவனித்தேன். அந்தச் சமயத்தில் திருட திட்டமிட்டேன். இதற்காகக் கடந்த 8.9.2019-ம் தேதி என் நண்பனின் பெயரில் உள்ள பைக்கில் அங்கு சென்றேன். வழக்கமாகத் திருடச் செல்பவர்கள் போலீஸிடமிருந்து தப்பிக்க அதிக வேக ரேஸ் பைக்குகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நானோ சாதாரண மொபைட்டைப் பயன்படுத்தியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

அள்ளிக்கொடுத்த புதுமாப்பிள்ளை; அதிர்ச்சியில்  மணமகள் - திருமணம் முடிந்த 3 வது நாளில் சிறையில் கணவன்!

என் மனைவி ஆசையாகக் கேட்ட வைர நெக்லஸ், தங்க செயின்களைத் திருமண பரிசாகக் கொடுத்தேன். இதனால் பெண் வீட்டினர் என்னைப் பாராட்டினார்கள். திருமணம் முடிந்த பிறகு, மாமியார் வீட்டிலேயே இருந்தேன். கொள்ளை நடந்த தேதியிலிருந்து போலீஸார் என்னைத் தேடிவருவதை செய்தி மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால், போலீஸாரின் சந்தேகப் பார்வை என் மீது விழாததால் தைரியாமாக வெளியில் சுற்றித் திரிந்தேன்.

என் மனைவி ஆசையாகக் கேட்ட வைர நெக்லஸ், தங்க செயின்களைத் திருமண பரிசாகக் கொடுத்தேன். இதனால் பெண் வீட்டினர் என்னைப் பாராட்டினார்கள்.
புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ

திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் குடியிருக்க வாடகை வீடு தேடிக்கொண்டிருந்தேன். வசதியாக வாழ ஸ்மார்ட் டிவி, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் திருடிய பணத்தில் வாங்கினேன். திருமணத்தையும் ஆடம்பரமாகவும் செய்தேன். ஆனால், திருமணம் முடிந்த சில நாள்களிலேயே என்னை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர்'' என்று கூறியுள்ளார்.