தக்கலை அரசு மருத்துவமனையில் கொலைவெறித் தாக்குதல்! செக்யூரிட்டிகளால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி

மருத்துவமனை வார்டிலிருந்து வெளியே வந்த மரிய சுரேஷை 4 செக்யூரிட்டிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மரிய சுரேஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரிய சுரேஷ் (40). கட்டடப் பணியில் சித்தாள் வேலைக்குச் சென்றுவந்தார். இவரது மாமியார், உடல்நலக் குறைவு காரணமாக தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைப் பார்ப்பதற்காக மரிய சுரேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தக்கலை அரசு மருத்துவமனைக்கு மனைவி கஸ்தூரியுடன் சென்றுள்ளார். அப்போது மரிய சுரேஷ் தனது மனைவியைத் திட்டியபடி சென்றுள்ளார்.

உடனே, அங்கு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி, ரெத்தினராஜ், `எதற்காகத் திட்டுகிறாய்' எனக் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு மரிய சுரேஷ் பதிலுக்கு ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது மரிய சுரேசின் மனைவி செக்யூரிட்டியிடம், `அவர் என்னைத்தானே திட்டினார். நீங்கள் எதற்கு பிரச்னை செய்கிறீர்கள்?' எனக் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த சமயத்தில் இருவரும் அமைதியாகியிருக்கிறார்கள். மரிய சுரேஷும் அவரது மனைவியும் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டனர்.
அதற்குள் செக்யூரிட்டி ரெத்தினராஜ், தன்னுடன் மேலும் மூன்று செக்யூரிட்டிகளைச் சேர்த்துள்ளார். பின்னர், மருத்துவமனை வார்டிலிருந்து வெளியே வந்த மரிய சுரேஷை 4 செக்யூரிட்டிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மரிய சுரேஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தபிறகும் அவரை விடாமல் ஷூ காலால், வயிற்றில் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மரிய சுரேசுக்கு வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு, அவர் மயக்கமடைந்திருக்கிறார்.
இதைப் பார்த்த அங்கிருந்த சிலர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மரிய சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மரியசுரேசின் மனைவி கஸ்தூரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸார், தலைமறைவான காவலாளி ரெத்தினராஜ் உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் தக்கலை காவல் நிலையம் முன் குவிந்த மரிய சுரேசின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குற்றவாளியைக் கைது செய்த பின்னர் உடலைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி மறியலை அவர்கள் கைவிட்டனர். அரசு மருத்துவமனைக்குச் சென்ற தொழிலாளியை செக்யூரிட்டிகள் மிதித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.