Published:Updated:

சாத்தான்குளம்: `கண்ணைக்கட்டி, காட்டுப்பகுதியில் அடித்தனர்!’ - அடுத்த சர்ச்சையில் போலீஸார்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸார் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், சர்ச்சைக்குரிய போலீஸார் மேலும் கலக்கம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இச்சம்பவம் குறித்து விசாராணை மேற்கொண்டுள்ளார். அத்துடன், இவ்வழக்கை மதுரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. சி.பி.ஐ அதிகாரிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

சி.பி.சி.ஐ.டி எஸ்.பி சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல் நாளிலேயே உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர், சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 8 அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், குற்றவழக்கில் கைதாகி கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த ராஜாசிங் என்பவர், கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்துக்கு 20 நாள்களுக்கு முன்பு தெற்குபேய்க்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை, உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் தலைமையிலான போலீஸார், அழைத்துச் சென்று தாக்கியதில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சில நாள்களில் உயிரிழந்தார்.

பாலகிருஷ்ணன் - ரகுகணேஷ்- ஸ்ரீதர்
பாலகிருஷ்ணன் - ரகுகணேஷ்- ஸ்ரீதர்

மகேந்திரனின் தாயார் வடிவு, `தன் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும்’ என மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கையும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். `சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸார் மீது புகார்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், பேய்க்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த யாக்கோபுராஜ், ``உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்கியதுடன், என் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளார். என் மீது போடப்பட்ட பொய்வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என எஸ்.ஐ ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் மீது எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய யாக்கோபுராஜ், ``பனைத்தொழில் செய்து வரும் என்னை கடந்த மே 23-ம் தேதி எஸ்.ஐ ரகுகணேஷ் மற்றும் அவருடன் வந்த போலீஸார் என்னை அடித்து ஜீப்பில் இழுத்துச் சென்று பழனியப்பபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

யாக்கோபுராஜ்
யாக்கோபுராஜ்

என் கண்களைத் துண்டால் கட்டி, நிர்வாணப்படுத்தி ரகுகணேஷ் மற்றும் போலீஸார் எனது புட்டங்களில் சரமாரியாக லத்தியால் அடித்துக் காயப்படுத்தினார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கும் என்னை அழைத்துச் சென்று ஆய்வாளர் ஸ்ரீதர் முன்னிலையில் நிறுத்தி, `சார், இவனை காட்டுப்பகுதியில நிர்வாணமாக்கி பின்பகுதியை பழுக்க வச்சுட்டோம்’ எனச் சொன்னார். அதற்கு ஸ்ரீதர், `நீ கொடுத்த அடியெல்லாம் காணாது. என் கண் முன்னால திரும்பவும் அடி’ எனச் சொன்னார்.

இரண்டு போலீஸார் என் கைகளை சுவரில் வைத்துப் பிடித்துக் கொண்டனர். மீண்டும் என்னை, ஸ்ரீதர் முன்னிலையில் லத்தியாலும், இரும்பு பைப்பாலும் தாக்கினார். எனது அலறல் சத்தத்தையும் வலியால் நான் துடிப்பதையும் பார்த்து ஸ்ரீதர் ரசித்தார். `உன்னை வெளியில விடணும்னா எவ்வளவு பணம் கொடுப்ப?’ எனக் கேட்டார் ஸ்ரீதர். `பனைமரம் ஏறிதான் பிழைப்பு நடத்துறேன் என்கிட்ட பணம் இல்லை’ எனச் சொன்னேன். ஓங்கி என் கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர், `இவன் பின்பகுதியைப் பழுக்க வச்சு ஜெயிலுக்கு அனுப்பு’ என ரகுகணேஷிடம் சொன்னார்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

அன்றிரவே, என் மீது 3 பிரிவுகளில் பொய்வழக்கு போட்டு கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். `நாங்க அடித்ததைப் பற்றி கோர்ட்ல சொன்னா உன் குடும்பம் இருக்காது’ எனச் சொல்லி என்னை மிரட்டியதால், நானும் எதுவும் சொல்லவில்லை. என் மீது புகார் கொடுத்த மகேந்திரன் யாருன்னே எனக்குத் தெரியாது. என்ன புகார் கொடுத்தாங்கன்னும் தெரியாது” என்றார். சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸார் மீது புகார்கள் அடுத்தடுத்து வெளிவருவதால் கலக்கத்தில் உள்ளனராம்.

அடுத்த கட்டுரைக்கு