Published:Updated:

ரூ.2 கோடி இன்ஷூரன்ஸ் பணம்: கூலிப்படையை ஏவி மனைவியைக் கொன்ற கணவன் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

விபத்தாகச் சித்திரிக்கப்பட்ட கொலை ( ட்விட்டர் )

இன்ஷூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

ரூ.2 கோடி இன்ஷூரன்ஸ் பணம்: கூலிப்படையை ஏவி மனைவியைக் கொன்ற கணவன் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

இன்ஷூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
விபத்தாகச் சித்திரிக்கப்பட்ட கொலை ( ட்விட்டர் )

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷாலு தேவி (32), அவரின் கணவர் மகேஷ் சந்திரா ராஜு (36) ஆகியோர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி பைக்கில் சமோத் கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது ஜெய்ப்பூர்-சிகார் சாலையில் உள்ள ஹர்மடா அருகே எஸ்.யூ.வி வாகனம் ஒன்று அவர்களை மோதிவிட்டு வேகமாகச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறை இதை விபத்தாகப் பதிவுசெய்து வழக்கை விசாரித்துவந்தது. இந்த நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷாலு தேவி
ஷாலு தேவி
ட்விட்டர்

2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஷாலு தேவி - மகேஷ் சந்திரா ராஜு தம்பதி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்துவந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். திருமணத்தின்போது ஷாலு தேவியின் பெற்றோர் மகேஷ் சந்திரா ராஜுக்கு வரதட்சணை தருவதாகக் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூறிய பணத்தை கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, 2019-ம் ஆண்டு மகேஷ் சந்திரா ராஜு மீது ஷாலு தேவி வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஷாலு தேவி இன்ஷூரன்ஸ் செய்திருப்பதை அறிந்த மகேஷ் சந்திரா ராஜு மீண்டும் மனைவியுடன் சேர்ந்திருக்கிறார். அந்த இன்ஷூரன்ஸ் பணத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கிறார்.

அதற்காகக் கூலிப்படையைச் சேர்ந்த முகேஷ் சிங் ரத்தோர், ராகேஷ் குமார், சோனு சிங் ஆகியோரிடம் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி, முதற்கட்டமாக ரூ5.5 லட்சம் வழங்கி விபத்தை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறார் மகேஷ். அக்டோபர் 5-ம் தேதி ஷாலு தேவியிடம் பலமுறை கோயிலுக்குச் செல்வதற்கு வற்புறுத்தியிருக்கிறார். ஷாலுவும், அவரின் உறவினரும் வீட்டைவிட்டு வெளியேறியதும், கூலிப்படைக்கு மகேஷ் சந்திரா ராஜூ தகவல் தெரிவித்து, விபத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கிறார்.

மகேஷ் சந்திரா ராஜூ
மகேஷ் சந்திரா ராஜூ
ட்விட்டர்

மேலும், ஷாலு தேவி இறந்தவுடனே முதல் நபராக இன்ஷூரன்ஸ் பணத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். இன்ஷூரன்ஸ் பணத்தை மகேஷ் சந்திரா பெற்ற பிறகே காவல்துறைக்குச் சந்தேகம் வந்து, விசாரணையின் கோணத்தை மாற்றியிருக்கிறது. அதன் பிறகே இந்தத் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. தன் மனைவியை இன்ஷூரன்ஸ் பணத்துக்காகத் திட்டம் போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து மகேஷ் சந்திரா, ``திருமணத்தின்போது என் மனைவியின் பெற்றோர் தருவதாகக் கூறிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. ஒருகட்டத்தில் அவளைக் கொலைசெய்ய முடிவு செய்தேன்'' எனத் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறை கொலை வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறது.