Published:Updated:

நெல்லை: பல்வேறு வழக்குகள்; திருந்தி வாழ்ந்துவந்த இளைஞர் அடித்துக் கொலை! - போலீஸ் விசாரணை

கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர்
கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர்

நெல்லை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கோழிக்கடை உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

நெல்லை, தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். 30 வயது இளைஞரான இவர் ஏற்கெனவே ஒரு கும்பலுடன் சேர்ந்து சட்டவிரோதச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

கொலையான அஜித் (பழைய படம்)
கொலையான அஜித் (பழைய படம்)

சில மாதங்களுக்கு முன்பு தன் கூட்டாளிகளிடமிருந்து பிரிந்து, திருந்தி வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் நெல்லை டவுன் பகுதியில் கோழிக்கடை நடத்திவந்தார். சமீபகாலமாக அவர் எந்த வம்புக்கும் செல்லாமல் தொழிலில் கவனம் செலுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

கோழி இறைச்சிக்கடை நடத்திவந்த அஜித், தன் கடையில் நாட்டுக்கோழி இறைச்சியும் விற்றுவந்திருக்கிறார். அதற்காக மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்குச் சென்று குறைந்த விலையில் நாட்டுக்கோழிகளை வாங்கி வந்து விற்பனை செய்திருக்கிறார்.

கால்வாயில் கிடந்த உடல்
கால்வாயில் கிடந்த உடல்

வழக்கம்போலவே நேற்று இரவு அவர் மானூர் பகுதிக்குச் சென்று கோழி வாங்கியிருக்கிறார். அப்போது அவருடைய பழைய நண்பர்கள் சிலர் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், அவரை மது குடிக்க வற்புறுத்தி அழைத்திருக்கிறார்கள்.

நண்பர்களைப் பார்த்ததும் அஜித், அவர்களுடன் சேர்ந்து அங்குள்ள காட்டுப் பகுதிக்கு மது குடிக்கச் சென்றிருக்கிறார். நரியூத்து கிராமம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் அமர்ந்து அனைவரும் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள்.

கொலையான அஜித்
கொலையான அஜித்

அதன் பின்னர், நண்பர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தங்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற அஜித், எதிரிகளுக்கு உளவு சொல்வதாக நண்பர்கள் சந்தேகித்து அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அதில் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தநிலையில், இன்று காலையில் வயல் வேலைக்குச் சென்றவர்கள் அங்குள்ள கால்வாயிலுள்ள புதரில் ஒருவரது பிணம் கிடப்பதைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது இறந்துகிடப்பது அஜித் என்பது தெரியவந்தது.

கொலை நடந்த இடத்தில் போலீஸார்
கொலை நடந்த இடத்தில் போலீஸார்

அஜித் உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.

தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர். இதற்கிடையே, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன், தச்சநல்லூர் அருகேயுள்ள பாறைக்குளத்தைச் சேர்ந்த பிச்சுமணி ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர் .

பழைய கூட்டாளிகளே அஜித்தைக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகிக்கிறோம்!
காவல்துறையினர்

சில தினங்களுக்கு முன்பு தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற தேவந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி நடந்தது. அந்தச் சம்பவத்தில் அஜித் உளவு சொன்னதாகச் சந்தேகப்பட்டு இந்தக் கொலை நடந்ததா என்பது பற்றியும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு