Published:Updated:

4 -வது மாடியிலிருந்து மகளோடு குதித்த பெற்றோர் - கிரெடிட் கார்டு கடனால் நேர்ந்த சோகம்!

பிரேம் குமார் எஸ்.கே.

கடந்த திங்கள் கிழமை அன்று அதிகாலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்த தகவலையடுத்து போலீஸார் தற்கொலை முயற்சி நடந்த இடத்துக்கு விரைந்தனர்.

தற்கொலை
தற்கொலை

கிரெடிட் கார்டுகளைத் தேடிச் சென்று வாங்கிய காலம் போய், தினமும் போன்களில் தொடர்புகொண்டு கிரெடிட் கார்டுகள் வேண்டுமா என்று கூவி விற்கும் நிலை வந்து வெகுகாலம் ஆகிவிட்டது.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

ஆனால், இந்த கிரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்று பின்னர் காலம் முழுவதும் இ.எம்.ஐ கட்டும் பலரை பார்த்திருப்போம். கிரெடிட் கார்டு கடன் தொல்லை காரணமாக கிழக்கு டெல்லியில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றுள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்று அதிகாலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்த தகவலையடுத்து போலீஸார் தற்கொலை முயற்சி நடந்த இடத்துக்கு விரைந்தனர். இதில் குடும்பத் தலைவரான கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தற்கொலை
தற்கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி, ``34 வயதான அந்தக் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கூடுதல் பணத் தேவைக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்துள்ளார். கிரெடிட் கார்டு கடன் கைமீறிப் போகவே தொடர்ச்சியாக வங்கிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

இதன் காரணமாக மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து 4 -வது மாடியிலிருந்து மனைவி மற்றும் தன் 4 வயது மகளுடன் குதித்துள்ளார். அவரின் மகளை கையில் பிடித்தபடி அவர் குதித்துள்ளார். அதனால் இது கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் மனைவி மற்றும் குழந்தை பார்க்கிங்கில் இருந்த இருசக்கர வாகனத்தின் மேல் விழுந்தனர். அதன் காரணமாக அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்” என்றார்.

Vikatan

மேலும், கடந்த புதன் கிழமை அன்று மருத்துவமனையில் சுயநினைவு திரும்பிய மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதில் அவர், ``நாங்கள் 4 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் வசித்துவருகிறோம். என் கணவர் பல்வேறு வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டுகளைப் பெற்றிருக்கிறார். இதன் மூலம் 8 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் ஏற்பட்டது.

கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டோம். உறவினர்களிடம் பணம் கேட்டும் பயன் இல்லை. என் கணவர் தொடர்ந்து என்னிடம், இறந்துவிடுவதே மேல் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

மனைவி மற்றும் மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மனைவி மற்றும் மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3.30 மணிக்கு என் கணவர் குழந்தையைக் கையில் பிடித்தபடி மொட்டை மாடிக்குச் சென்றார். நானும் அவரைத் தொடர்ந்து சென்றேன். குழந்தையைக் கையில் பிடித்தபடி 4 -வது மாடியிலிருந்து அவர் குதித்துவிட்டார். நானும் உடனே யோசிக்காமல் குதித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பணத்தை கட்ட முடியாமல் குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.