Election bannerElection banner
Published:Updated:

புனே: `காதல் விவகாரம்’ - மகள்களை லாரி ஏற்றிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை?

சித்திரிப்பு காட்சி
சித்திரிப்பு காட்சி

`காதல் விவகாரம்’ - மகள்களை லாரி ஏற்றிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை... ரயில் தண்டவாளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட ரயில்வே ஊழியர்.

சம்பவம் 1: மகள்களைக் கொன்ற தந்தை?!

புனே அருகிலுள்ள இந்துரி என்ற கிராமத்தில் வசித்துவந்த பராதே (40) என்பவருக்கு 18 வயதில் நந்தினி என்ற மகளும், 14 வயதில் வைஷணவி என்ற மகளும் இருந்தனர். பராதே சொந்தமாக ஒரு லாரிவைத்து தொழில் செய்துவருகிறார். மூத்த மகள் அடிக்கடி மொபைல்போனில் யாரோ ஒரு வாலிபருடன் சாட்டிங் செய்துகொண்டிருந்தார்.

பராதே நள்ளிரவில் எழுந்தபோது தன் மகள் யாரோ ஒரு வாலிபருடன் சாட்டிங் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து கடும் கோபத்துக்கு உள்ளானதாகச் சொல்லப்படுகிறது. உடனே தனது மகளை அடித்து உதைத்து, பின்னர் ஒரு பேப்பரில் எதையோ எழுதினார். அதைத் தன் மனைவியிடம் கொடுத்து கையெழுத்து போடும்படி கேட்டுக்கொண்டார். அவர் மனைவியும் மகள்களை மீட்க, படித்துப் பார்க்காமல் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.

கொலை
கொலை

சிறிது நேரம் கழித்து தனது மகள்கள் இரண்டு பேரையும் அடித்து இழுத்துக்கொண்டு வெளியில் சென்றார் பராதே. அவர்களை அடித்து லாரி முன்பாகப் போட்டார். உடனே தனது லாரியை வேகமாக ஓட்டி வந்தார். அந்நேரம் அவர் மனைவியும் `என்ன இந்த நேரத்தில் லாரி சத்தம் கேட்கிறது?’ என்று பார்க்க வெளியில் வந்தார். அவர் வந்து காப்பாற்றும் முன்பாக லாரி இரண்டு மகள்கள் மீதும் ஏறிவிட்டது. அதோடு தனது மனைவியையும் லாரியில் விழும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் விழவில்லை. தொடர்ந்து பராதே அதே லாரியின் சக்கரத்தில் விழுந்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக, அந்தக் கடிதத்தில் தனது மகளின் நடத்தையால் தானும் தனது மனைவி மற்றும் மகள்கள் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். லாரி வேகமாக வரும்போது இரண்டு பெண்களும் தப்பி ஓட ஏன் முயற்சிக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

சம்பவம் 2: குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!

இதற்கிடையே மும்பை அருகே ரயிலில் அடிபட்டு இறக்கவிருந்த குழந்தையை ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரைப் பணயம்வைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மும்பை அருகிலுள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் தனது தாயின் கையைப் பிடித்துக்கொண்டு ரயில்வே பிளாட்பாரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அந்த நேரம் தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். அதேநேரத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.

குழந்தையை ஓடி வந்து காப்பாற்றும் ஊழியர்
குழந்தையை ஓடி வந்து காப்பாற்றும் ஊழியர்

சிறுவன் பிளாட்பாரத்தில் ஏற முயன்றான். ஆனால் முடியவில்லை. அந்நேரம் இதை கவனித்த ரயில்வே பாயின்ட்மேன் மயூர் செல்கே ரயில் தண்டவாளம் வழியாக வேகமாக ஓடிவந்து குழந்தையை எடுத்து பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு தானும் கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாட்பாரத்தில் ஏறிவிட்டார். சில விநாடிகள் தாமதித்திருந்தாலும், பாயின்ட்மேன் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கக்கூடும். ஆனால் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையைக் காப்பாற்றிய செயலை ரயில்வே அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ரயில்வே அமைச்சகம் இந்த அரிய வீடியோவை வெளியிட்டு உண்மையான ஹீரோ என்று பாராட்டியுள்ளது. மத்திய ரயில்வே பொதுமேலாளரும் அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரயில் முன்பாக குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை மூன்று ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு