Published:Updated:

`என் பொண்ணுக்கு மூச்சு திணறுது!’- விழுப்புரத்தில் 5 பேரின் உயிரைப் பறித்த 3 நம்பர் லாட்டரி

3 நம்பர் லாட்டரி சீட்டால் தங்களின் மூன்று குழந்தைகளுக்கும் சயனைடு கொடுத்து கொலை செய்துவிட்டு, தம்பதி இருவரும் தற்கொலை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

அருண் மற்றும் அவரின் மனைவி
அருண் மற்றும் அவரின் மனைவி

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் நகை செய்யும் தொழிலாளி. 33 வயதான இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி (5), யுவஸ்ரீ (3), பாரதி (1) என மூன்று பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், 3 நம்பர் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு அடிமையான அருண், அதன் மீது ஏற்பட்ட மோகத்தால் வேலை செய்யும் இடத்திலும், உறவினர்களிடமும் பெருமளவு கடன் வாங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அருணுக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்த அருண் குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

வீடு
வீடு

அதன்படி நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தன் மூன்று மகள்களுக்கும் சயனைடு கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை எடுத்து தன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருக்கிறார். 2 நிமிடங்கள் 13 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் தன் மனைவியை தோளில் சாய்த்துக்கொண்டு பேசத் துவங்கும் அருண், ``பாஸு… தெய்வங்களே… மனுஷாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க… உங்ககிட்டதான் நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு தெரியாதுப்பா அதுலாம் கத்துக்க தெரியாது. கருமாந்திரம் எழவு பிடித்தவன் நான்.

மனுஷாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல. என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சயனைடு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன் (வீடியோவில் தனது குழந்தைகளைக் காட்டுகிறார்). நானும் சாப்பிடப் போறேன். இதுக்கப்புறம் என்னால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஜாலியா இருங்க. இந்த உலகத்துல நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க. விழுப்புரத்துல மூணு நம்பர் லாட்டரி சீட்ட ஒழிச்சிடுங்கடா அப்பா. என்னமாதிரி ஒரு 10 பேராவது பொழைப்பான். இங்கு எவனும் யோக்கியன் கிடையாது. நானும் யோக்கியன் கிடையாது. அய்யோ என் பொண்ணுக்கு மூச்சு திணறுகிறதுடா (அழுகிறார்). ஏண்டா என்னை இப்படி வாட்டி வதைக்க வைச்சிட்டீங்க.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

சரி நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாகத்தான் போறேன் பிரச்னையில்லை. தங்கமே என்பார்களே அது நீங்கள்தான். நீங்க ஃப்ரீயா இருங்க ஒண்ணுமில்ல. நியாயமா எதையாவது செய்யுங்களேன். என்னைப்போல கஷ்டப்படுபவர்களுக்கு எதையாவது செய்யுங்களேன். செய்ய மாட்டீங்க இல்ல. பண்ண முடியலைன்னா கூட பரவால்ல… செத்துப் போச்சு. மூணு புள்ளையும் செத்துப்போச்சு. எனக்கும் ஊத்தி வச்சிட்டேன். சரக்குலதான் ஊத்தி வச்சிட்டேன். நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டு மொத்தமா எங்க வேலையை முடிக்கறோம். ஃப்ரீயா இருக்கறோம். வாழ்க்கையில எவனுக்கும் தொல்லை கொடுக்க மாட்டோம். எவனுக்குமே தொல்லை இல்லாமல் செத்துப் போகணும். இங்கு வாழ முடியல” என்பதோடு அந்த வீடியோ முடிகிறது.

அருண் உட்பட அனைவரும் சயனைடு குடித்துவிட்ட பிறகு 41 விநாடிகள் ஓடும் மற்றொரு வீடியோவில் 2 குழந்தைகள் இறந்த நிலையில் ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் காட்சி, இதயம் பலவீனமாக இருப்பவர்களால் பார்க்க முடியாது.

போலீஸ்
போலீஸ்

இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் , ``இந்த ஆண்டு மற்றும் சட்ட விரோத லாட்டரி விற்றதாக 200 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 160 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். லாட்டரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். லாட்டரி விற்பனை மீது நடவடிக்கை எடுக்காத இரு இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாட்டரி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள்” என கூறியுள்ளார்.