திருப்பத்தூர் நகரிலுள்ள கௌதம்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் விஜயபிரசாந்த் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்வரன், அஜய்பாலா ஆகிய இருவரும் விஜயபிரசாந்த்தின் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் முகேஷ்வரன் திருமணம் ஆனவர். அவருக்குக் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்காக நள்ளிரவில் நண்பர்களை அழைத்து, கௌதம்பேட்டை அருகேயிருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடி, மது விருந்து வைத்திருக்கிறார் முகேஷ்வரன்.

இதில், விஜயபிரசாந்தும் கலந்துகொண்டு மது குடித்திருக்கிறார். மது குடித்த அனைவருமே கஞ்சாவையும் புகைத்திருக்கிறார்கள். அந்த சமயம், விஜயபிரசாந்தின் எதிரியான மனோஜ் என்பவர் சென்றிருக்கிறார். அவரை மது விருந்து வைத்த முகேஷ்வரன் அழைத்துப் பேசியிருக்கிறார். இதனால் கடுப்பான விஜயபிரசாந்த் தனது எதிரியிடம் ‘உனக்கு என்னடா பேச்சு; நீ என்னுடைய நண்பனா, அவனுடைய நண்பனா?’ என்று வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த முகேஷ்வரன் கத்தியை எடுத்து நண்பன் என்றும் பார்க்காமல் விஜயபிரசாந்தை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். மார்புப் பகுதியில் கத்தி ஆழமாக இறங்கியதில் ரத்தம் பீறிட்டு கொட்டியது. அடுத்த சில நிமிடங்களில் சுருண்டு விழுந்த விஜயபிரசாந்த் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீஸார், விஜயபிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து கொலைக்குக் காரணமான அவரின் நண்பன் முகேஷ்வரனைக் கைதுசெய்து, தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். கஞ்சா போதை தெளிந்த பின்னர் முகேஷ்வரன், ‘மச்சான் போயிட்டியாடா... நான் சும்மாதாண்டா குத்துனேன்’ என்று கதறியிருக்கிறார். இந்தச் சம்பவத்தால், திருப்பத்தூர் நகரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதுமே கஞ்சா விற்பனை, காட்டன் சூதாட்டம், மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற குற்றச்செயல்கள் பெருகியிருக்கின்றன. இவை அத்தனையும் செய்யும் குற்றவாளிகளுக்குப் பக்கபலமாக இருப்பது அரசியல் கட்சியினர்தான் என்ற புகார் மாவட்டத்தில் பரபரக்கிறது. ஆனால், காவல்துறையினரின் நடவடிக்கைகள் போதுமான அளவுக்கு இருப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.