Published:Updated:

`எப்போதும் செல்போன்; ஃபேஸ்புக்கில் 6,000 ஃபாலோயர்கள்!’ - கணவரால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை ( மாதிரி புகைப்படம் )

ராஜஸ்தானில் தன் மனைவி போனுக்கு அடிமையாகி எப்போதும் ஃபேஸ்புக்கில் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறார் என்ற கடுப்பில் அவரைக் கொலை செய்துள்ளார் கணவர்.

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப உலகத்தில், சமூகவலைதளங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. அவை இல்லாமல் ஒரு மனிதனின் அன்றைய நாள் முடிவதில்லை என்ற அளவுக்கு சமூகவலைதளத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல நல்ல விஷயங்களும் அதே அளவிலான தீய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் நடைபெற்றுள்ள சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செல்போன்
செல்போன்
மாதிரி புகைப்படம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான அயாஜ் அகமது. இவர் 22 வயதான ரேஷ்மா மாங்லனி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டவே இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தத் தம்பதி வெளியில் எங்கு சென்றாலும் தங்களைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதிலும் ரேஷ்மா சமூகவலைதளத்தில் மூழ்கும் அளவுக்கு அதைப் பயன்படுத்தக்கூடியவராக இருந்துள்ளார்.

`அவளால் என் தம்பியை இழந்தேன்; அதனால் கொன்றேன்!'- அதிகாலை 4 மணிக்கு வந்த போனால் அதிர்ந்த குடும்பம்

இதன் காரணமாகவே இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தன் மனைவியின் செல்போனை செக் செய்த அயாஜ், தன் மனைவிக்கு ஃபேஸ்புக்கில் 6,000 ஃப்ரெண்ட்ஸ் இருப்பதையும் அவர் பிறருடன் மெசேஜ் மூலம் பேசிவருவதையும் பார்த்துள்ளார். இதனால், மனைவி மீது சந்தேகம் கொண்ட அயாஜ் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்துள்ளார். ஃபேஸ்புக்கை முன்வைத்தே இவர்கள் தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே, `இனி சந்தேகப்படும் அயாஜுடன் வாழ முடியாது' என முடிவெடுத்து தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் ரேஷ்மா.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
மாதிரி புகைப்படம்

தன் தாய் அறிவுரை கூறியும் அயாஜுடன் சேர்ந்து வாழ மறுத்த ரேஷ்மா, தன் கணவரிடம் விவாகரத்து கேட்டிருந்தார். காதல் மனைவி என்பதால் அயாஜ் விவாகரத்து கொடுக்க மனம் இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ரேஷ்மாவின் தாய் வீட்டுக்குச் சென்று, அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதம் வாங்கியுள்ளார். பின்னர் அதேநாள் இருவரும் இணைந்து ஊர் சுற்றிப் பார்க்க வெளியில் சென்றுள்ளனர். அப்போதும் தொடர்ந்து ஃபேஸ்புக் பார்த்தபடியே இருந்துள்ளார் ரேஷ்மா.

இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அயாஜ், அன்றைய தினம் இரவு ஜெய்ப்பூர்- டெல்லி தேசிய நெடுஞ்சாலைக்கு மனைவியை அழைத்துச் சென்று அங்குள்ள மறைவான இடத்தில் வைத்து ரேஷ்மாவைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். பின்னர் அருகிலிருந்த பெரிய கல்லால் ரேஷ்மாவின் தலையைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

கொலை
கொலை
மாதிரி புகைப்படம்

மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற ஒருவர், சாலையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் அயாஜைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் பேசிய அயாஜ், ``என் மனைவி போனுக்கு அடிமையாக இருந்தார். எல்லா நேரமும் ஃபேஸ்புக்கில் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார். அந்தக் கோபத்தில் கொலை செய்துவிட்டேன்” எனக் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு