Published:Updated:

`டார்ச்சர் கொடுத்தார்; கணவரிடம் கூறினேன்!' - சென்னை ஆட்டோ டிரைவர் கொலையில் பெண் வாக்குமூலம்

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் கொலை வழக்கில் கைதான பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரவுடி சுரேஷ்
ரவுடி சுரேஷ்

சென்னை ரெட்டேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷை கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை. சுரேஷை பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் இல்லை. இதுதொடர்பாக அவரின் அம்மா கலா, கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர். பாடியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக கலா, போலீஸாரிடம் தெரிவித்தார்.

Representation Image
Representation Image

கார்த்திகா பாடி பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகே இட்லிக்கடை நடத்தி வருகிறார். கார்த்திகா மற்றும் அவரின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுரேஷ் காணாமல்போனது தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறியுள்ளனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் சுரேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் கொடுத்த தகவலின்பேரில் உடலைக் கைப்பற்றிய கொரட்டூர் போலீஸார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார்த்திகா அவரின் கணவர் ஜெயக்கொடி உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ``சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பாடியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 2010-ம் ஆண்டு குடிபோதையில் தன் தாய்மானைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுரேஷ் தனது குடும்பத்துடன் முதலில் பாடியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவரது குடும்பம் ரெட்டெரிக்கு குடிபெயர்ந்துள்ளது. பாடி பகுதியில் இட்லிக்கடை நடத்திவரும் கார்த்திகாவுக்கும் சுரேஷூக்கும் பழக்கம் இருந்துள்ளது.

murder
murder

கார்த்திகாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை. பிழைப்பைத் தேடி தன் கணவர் ஜெயக்கொடியுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். பாடி பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகே இட்லிக்கடை நடத்தி வந்தார். கார்த்திகாவின் கடையில் இட்லி சாப்பிடுவதை சுரேஷ் வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சுரேஷ் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததையடுத்து ரெட்டேரிக்கு குடிபெயர்ந்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையேயான பழக்கம் நீடித்து வந்துள்ளது.

`நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்தினார்!' - சாப்பிடும்போது கொல்லப்பட்ட சென்னை ரவுடி

இந்த விவகாரம் கார்த்திகாவின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து கண்டித்துள்ளார். இதன் காரணமாக சுரேஷிடம் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். கடையில் வைத்தே கார்த்திகாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். சுரேஷ் அடிக்கடி மதுபோதையில் வந்து தகராறு செய்தது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் நடந்த விவரங்களைத் தன் கணவர் ஜெயக்கொடியிடம் தெரிவித்துள்ளார்.

Murder
Murder

சுரேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜெயக்கொடி, தன் நண்பர்களான காவாங்கரையைச் சேர்ந்த ராஜா, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்த்து அடித்துக்கொலை செய்துள்ளனர். சுரேஷின் ஆட்டோவிலே அவரது உடலை ஏற்றிக்கொண்டு பாடியில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், ஒரு காரில் உடலை எடுத்துக்கொண்டு பெரும்பாக்கம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு வைத்து உடல் தனியாகத் தலை தனியாக வெட்டியுள்ளார். உடல் பாகங்களை தனித்தனியாக வீசிவிட்டு திரும்பவந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரின் உடல் மட்டும் செங்குன்றம் பகுதியில் மீட்கப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மற்றொரு பகுதியில் சுரேஷின் தலையும் மீட்கப்பட்டது" என்றனர்.