Published:Updated:

`சந்தோஷமாகத்தான் தாலி கட்டினான்... ஆனால்?' - மணமகளுக்கு நேர்ந்த கொடூரம்; விபரீத முடிவெடுத்த மணமகன்

கொலை செய்யப்பட்ட சந்தியா
கொலை செய்யப்பட்ட சந்தியா

முதலிரவில் மணமகன் நீதிவாசனுக்கும் மணமகள் சந்தியாவுக்கும் இடையே என்ன பிரச்னை நடந்தது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அடுத்த சோமஞ்சேரியைச் சேர்ந்தவர் நீதிவாசன். கூலி வேலை செய்துவந்தார். இவருக்கும் சந்தியாவுக்கும் நேற்று திருமணம் நடந்தது. பின்னர், இருவருக்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். மணமகன் நீதிவாசனும் மணமகள் சந்தியாவும் மகிழ்ச்சியாக அறைக்குள் சென்றனர். இன்று காலை பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் அவர்களின் அறை திறக்கப்படவில்லை. அதனால், உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அள்ளிக்கொடுத்த புதுமாப்பிள்ளை; அதிர்ச்சியில்  மணமகள் - திருமணம் முடிந்த 3 வது நாளில் சிறையில் கணவன்!
சடலமாக மணமகள் சந்தியா
சடலமாக மணமகள் சந்தியா

மணமகள் சந்தியா ரத்த வெள்ளத்தில் தரையில் இறந்து கிடந்தார். மணமகன் நீதிவாசன் அறையில் இல்லை. இதையடுத்து சந்தியாவை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தியாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணமகன் நீதிவாசன் எங்கு சென்றார் என்று உறவினர்கள் தேடினர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் உள்ள வேப்பமரத்தில் நீதிவாசன், தன்னுடைய பட்டுவேட்டியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நீதிவாசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலிரவில் மணமகன் நீதிவாசனுக்கும் மணமகள் சந்தியாவுக்கும் இடையே என்ன பிரச்னை நடந்தது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

`சிறுமிக்கு காதல் வலை; 7 நாள்களுக்குப் பிறகு மீட்பு!' - விசாரணையில் சிக்கிய சென்னை இளைஞர்
மணமகன் நீதிவாசன்
மணமகன் நீதிவாசன்

இதுகுறித்து காட்டூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மணமகள் சந்தியா, கடப்பாரையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த அறையில் இருந்த கடப்பாரையில் ரத்தக்கறைகள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்துள்ளோம். முதலிரவுக்காக அறைக்குள் சென்ற மணமகன் நீதிவாசனுக்கும் மணமகள் சந்தியாவுக்கும் இடையே தகராறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சந்தியாவை அடித்துக் கொலை செய்தபோது அவரின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுதொடர்பாக, இருவரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம்.

சந்தியா கொலை செய்யப்பட்ட பிறகுதான் அருகே உள்ள வயல்வெளியில் மணமகன் நீதிவாசன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ள நீதிவாசன், கயிறு எதையும் பயன்படுத்தவில்லை. அவர் அணிந்திருந்த வேட்டியில் தூக்குப்போட்டுள்ளார். மேலும், முதலிரவு அறையில் சோதனை செய்தபோது எந்தவித தடயமும் சிக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் கைரேகைககைப் பதிவு செய்துள்ளோம். இந்தக் கொலையைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

Representational Image
Representational Image

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், ``நீதிவாசனுக்கும் சந்தியாவுக்கும் நேற்றுதான் திருமணம் நடந்தது. சந்தோஷமாகத்தான் நீதிவாசன், சந்தியாவின் கழுத்தில் தாலிக் கட்டினான். திருமண மாலை காய்வதற்குள் இப்படியொரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. எந்தப் பிரச்னை என்றாலும் பேசி முடிவு செய்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலிரவு அறைக்குள் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது" என்றனர் சோகமாக.

முதலிரவில் மணமகள் கொலை செய்யப்பட்டதோடு மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காட்டூர் பகுதியில் காட்டுத்தீ போல பரவிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு