Published:Updated:

திருச்சி: மனைவி, மாமியாரைக் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞர்! குழந்தையுடன் தலைமறைவு

கொலை
கொலை ( Representational Image )

மனைவியின் நடத்தையில் உலகநாதன் சந்தேகப்பட்டு சண்டை போட்டிருக்கிறார். அப்போது, மாமியார் கலைச்செல்வி, அவரின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டதாகத் தெரிகிறது.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும் மாமியாரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தனது 2 வயது மகளுடன் தலைமறைவாகியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கொலை செய்த பிறகு பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவகாசமாகப் பேசிவிட்டு, பைக்கில் தப்பிய இளைஞரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மனைவி பவித்ரா
மனைவி பவித்ரா

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் பின்புறத்திலுள்ள பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவில் வசித்துவருபவர் உலகநாதன். இவர் தனது மனைவி பவித்ரா, மாமியார் கலைச்செல்வி, மகள் கனிஷ்காவுடன் வசித்துவந்தார். பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்த இவர், தற்போது வேலையில்லாமல் மாமியார் வீட்டில் வசித்துவதிருக்கிறார். இந்தநிலையில், வீட்டில் கணவன்- மனைவி இருவருக்குள் நடந்த பிரச்னையை அவருடைய மாமியார் கலைச்செல்வி தட்டிக்கேட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த உலகநாதன் மனைவி, மாமியாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார்.

பின்னர், வீட்டைப் பூட்டிவிட்டு தனது 2 வயதுக் குழந்தையான கனிஷ்காவுடன் டூவிலரில் தப்பியிருக்கிறார். குழந்தையை டூவிலரில் உட்காரவைத்தபோது பக்கத்து வீட்டிலிருந்த ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார். அப்போது, எதுவுமே நடக்காதுபோல் உலகநாதனும், பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, பின்னர் டூவீலரில் மகளைத் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். பிறகு, மாலை வரையிலும் வீடு திறக்காததைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் திறந்து பார்த்திருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

உள்ளே இருவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்குத் தகவலளித்தனர். தகவலின் பேரில் மாநகர துணை கமிஷனர் குமார் ரெட்டி, உதவி கமிஷனர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்திருக்கிறார்கள் போலீஸார். சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள்.

சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம்.``இப்போதுதான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் உலகநாதனின் தாய், தனது மருமகளுக்குப் பலமுறை போன் அடித்துப் பார்த்திருக்கிறார். அவர் எடுக்காதபட்சத்தில் பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கு போனில் தகவலைச் சொல்லியிருக்கிறார்.

மாமியார்  கலைச்செல்வி
மாமியார் கலைச்செல்வி

அவர்களும் வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோதுதான் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் எங்களுக்குத் தகவல் அளித்ததன்பேரில் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். மனைவியின் நடத்தையில் உலகநாதன் சந்தேகப்பட்டு சண்டை போட்டிருக்கிறார். அப்போது, மாமியார் கலைச்செல்வி, அவரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த உலகநாதன், மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலை செய்துவிட்டு உலகநாதன், தனது 2 வயது மகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடித்த பிறகுதான் முழு விவரங்களும் தெரியவரும்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு