Published:Updated:

பெண்ணின் கழுத்தை அறுத்து காதலனும் தற்கொலை! - தூத்துக்குடி விபரீதம்

தூத்துக்குடியில் தகாத உறவால் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன், காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட ரமேஷ்பாபு
தற்கொலை செய்துகொண்ட ரமேஷ்பாபு

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகிலுள்ள துலுக்கர்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு இரும்புக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். அதே கம்பெனியில் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பகவதியும் வேலை பார்த்துவருகிறார். பகவதிக்கு 9 வயது மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்பாபுவும் பகவதியும் ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகியிருக்கிறது. இந்த விவகாரம் பகவதியின் கணவர் முருகனுக்குத் தெரிய வரவே, பகவதியைக் கண்டித்தாராம். இதைத்தொடர்ந்து, `குழந்தைகளை மட்டும் கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தால்போதும். வேலைக்குப் போக வேண்டாம்' என முருகன் சொன்னதால் கடந்த ஒரு மாதமாக வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

ரமேஷ்பாபு, பகவதியுடன் பலமுறை பேச முயன்றும் பகவதி அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளாராம். இந்த நிலையில், இன்று மதியம் ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரமேஷ்பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் பகவதி
சிகிச்சை பெற்று வரும் பகவதி

பகவதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரமேஷ்பாபுவைப் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் புகுந்து ரமேஷ்பாபு தப்பியோட முயன்றபோதே, தானும் கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அதிகமான ரத்தம் வெளியேறியதால் மயங்கி கீழே விழுந்தார்.

 `குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன்

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் அதிக ரத்தப் போக்கின் காரணமாக ரமேஷ்பாபு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பகவதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரமேஷின் பைக்
ரமேஷின் பைக்

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன், காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.