Published:Updated:

``ஸ்டேஷன்ல என் பையன் பாதி உசுரோடுதான் இருந்தான்!'' - டெல்லி வன்முறையில் மகனை பறிகொடுத்த தாய் கதறல்

டெல்லி வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள்
டெல்லி வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள்

டெல்லி வன்முறை தொடர்பாக வெளியான அதிர்ச்சி வீடியோவில் இருந்த இளைஞர்களில் ஒருவரான ஃபைசான் என்பவர் உயிரிழந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். டெல்லி வீதிகள் சூறையாடப்பட்டுள்ளன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம், ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவங்களும் போலீஸ்காரர்களே வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரங்கேறின.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

சமீபத்தில் நடந்த டெல்லி கலவரத்திலும் போலீஸார் சாலையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை உடைப்பது, போலீஸார் துணையுடன் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, இளைஞர்கள் 5 பேரை போலீஸார் தாக்குவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. ரத்தக் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்த இளைஞர்கள் 5 பேரை போலீஸார் கால்களால் எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நிறைய வீடியோக்கள் போலியானது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதில் இணையத்தில் வெளியான பல வீடியோக்கள் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த வகையில் இளைஞர்களை போலீஸ் தாக்கும் வீடியோவும் பொய்யானது என முதலில் கூறப்பட்டது. இந்த வீடியோ இப்போது டெல்லியில் நடந்ததுதான் என்பதை ஆங்கில ஊடகங்களான NDTV, altnews ஆகியவை உறுதிசெய்துள்ளது.

`வன்முறையாளர்கள் வைத்த தீ.. கொழுந்துவிட்டெரிந்த குடோன்’ - மூதாட்டி உயிரிழப்பால் தவிக்கும் குடும்பம்!

அந்த வீடியோவில், இளைஞர்களை சூழ்ந்திருந்த காவலர்கள் தேசிய கீதத்தைப் பாடுமாறு கூறுகின்றனர். ரத்தக் காயங்களுடன் கீழே சரிந்து கிடந்த இளைஞர் தேசிய கீதத்தைப் பாடினார். அவர் பாடும்போதே மற்றொரு காவலர் நன்றாகப் பாடு என எட்டி உதைக்கிறார். இந்த வீடியோ வெளியாகி விவாதப்பொருளான நிலையில் அந்த வீடியோவில் இருந்த இளைஞர்களில் ஒருவரான ஃபைசான் என்பவர் உயிரிழந்துள்ளார். போலீஸார் அடித்ததன் காரணமாக ஃபைசான் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். முதலில் சாலையில் வைத்து அடித்த போலீஸார் பின்னர் அவர்களை கஸ்டடியில் வைத்து கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், ``என் மகன் மற்றும் சிலரை போலீஸார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இரும்பு ராடுகளைக் கொண்டு அவர் தாக்கப்பட்டுள்ளார். அவனுடைய கால்கள் உடைந்திருந்தது. போலீஸார் அடித்ததில் அவனது உடல்கள் கறுப்பு நிறத்தில் இருந்தது. முதலில் சாலையில் வைத்து அடித்துள்ளனர். அதன்பின்னர் எங்கு கொண்டு சென்றனர் எனத் தெரியவில்லை. என் மகன் மருத்துவமனையில் இருப்பதாக சிலர் கூறினர். இதையடுத்து நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஆனால், என் மகன் அங்கு இல்லை. இதையடுத்து, ஜோதி காலனியில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்று என் மகனுடைய போட்டோவைக் காண்பித்து இங்கே இருக்கிறாரா என விசாரித்தேன்.

வடிகாலில் சடலம்;உடலைத் துளைத்த தோட்டாக்கள்?!- டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மத்திய உளவுத்துறை காவலர்

காவல்நிலையத்தில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினர். நான் என் மகனைப் பார்க்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால், என்னை சந்திக்கவிடவில்லை. என் மகனை விடுவிக்குமாறு மன்றாடினேன். அவர்கள் என் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. நள்ளிரவு 1 மணி வரை காவல்நிலையத்தில் காத்திருந்துவிட்டு வீடு திரும்பினேன். அடுத்தநாள் காலையில் மீண்டும் காவல்நிலையத்துக்கு விரைந்தபோது என் மகனை தடுப்புக் காவலில் வைத்துவிடுவோம் என மிரட்டினர். இதையடுத்து நான் திரும்பிவிட்டேன். இரவு 11 மணிக்கு காவல்நிலையத்திலிருந்து போன் வந்தது. நான் அங்கு சென்று பார்த்தபோது பாதி உயிருடன்தான் இருந்தான்” எனக் கண்ணீர் வடித்தார்.

Representation image
Representation image

ஃபைசான் போராட்டத்துக்கு எல்லாம் செல்லவில்லை. போலீஸார் அவனை விடுவித்ததும் உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவனது உடல்நிலை மோசமாக இருந்ததால் குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு